நீட் தேர்வுக்கு எதிராக திமுக எம்பி-க்கள் பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பார்கள் – மு.க.ஸ்டாலின்

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மருத்துவ கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான ‘நீட்’ தேர்வு முடிவுகள் இன்று (நேற்று) வெளியிடப்பட்டுள்ள நிலையில், 51 சதவீதத்துக்கு மேற்பட்ட சுமார் 75 ஆயிரம் தமிழக மாணவ-மாணவிகள் வெற்றி பெற முடியவில்லை. அவர்களில் இரு மாணவிகள் அவசர முடிவெடுத்து தங்களின் இன்னுயிரை மாய்த்துக்கொண்டிருக்கிறார்கள். தற்கொலை செய்து கொண்ட மாணவிகளின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழக இளைஞர்களின் மருத்துவ கல்விக்கனவை ‘நீட்’ தேர்வு எவ்வளவு மோசமாக பாழ்படுத்தி சிதைத்து மாணவர்களின் வாழ்வில் சூறாவளியை ஏற்படுத்தியுள்ளது என்பதற்கு இதுவே சான்று. ஆனால் இதனை மத்திய பா.ஜ.க. அரசோ எண்ணிப்பார்த்து உணர மறுக்கிறது. இங்குள்ள அ.தி.மு.க. அரசும் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களின் அடிப்படையில் ‘நீட்’ தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு பெறுவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் எத்தனை உயிர்கள் போனால் நமக்கு என்ன? என்று பதவியில் நீடிப்பதில் மட்டுமே கவனமாக காலத்தைக் கழிக்கிறது.

கிராமப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் உள்ள ஏழை மாணவர்கள் ‘நீட்’ தேர்வால் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்று ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி நீட் வழக்கில் அளித்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதலில் ‘நீட்’ தேர்வுக்கு பலியான அனிதாவின் மரணத்திலிருந்து இன்றைக்கு நேர்ந்துள்ள ரிதுஸ்ரீ, வைசியா துரதிரு‌‌ஷ்டவசமான மரணங்கள் வரை தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

இனியும் இந்நாட்டின் எதிர்கால முன்னேற்றத்திற்கு தேவையான மாணவ-மாணவிகள் உயிருடன் விளையாடாமல், ‘நீட்’ தேர்விலிருந்து தமிழகத்துக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என தமிழக சட்டசபை நிறைவேற்றி அனுப்பிய மசோதாவுக்கு குடியரசு தலைவர் அனுமதியை மத்திய பா.ஜ.க. அரசு உடனடியாக பெற்றுத்தர வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்துகிறேன்.

கூட்டாட்சி தத்துவத்தின் கீழ் செயல்படும் இந்தியாவில், ஒரு மாநில அரசின் உணர்வுக்கு மதிப்பளிப்பது மத்திய அரசின் அரசியல் சட்டக் கடமை என்பதை பிரதமர் நரேந்திர மோடி இப்போதாவது உணர வேண்டும்.

ஒவ்வொரு ‘நீட்’ தேர்வின் போதும், தமிழக மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது தொடர்கதை ஆகிவருவது நாட்டுக்கும், தமிழகத்துக்கும் நல்லதல்ல என்பதை மத்திய ஆட்சியாளர்கள் உணர்ந்து திருத்திக்கொள்ளும் வகையில், எதிர்வரும் பாராளுமன்ற கூட்டத்தொடரில் தி.மு.க. உறுப்பினர்கள் ‘நீட்’ பிரச்சினையை பாராளுமன்றத்தில் ஆணித்தரமாக குரல் எழுப்பி உரிய தீர்வு காண முயற்சிப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *