Tamilசெய்திகள்

நிர்பயா கொலை குற்றவாளிகளை தூக்கில் போடும் ஊழியர் ரெடி!

நிர்பயா கற்பழித்து- கொலை வழக்கு குற்றவாளிகள் 4 பேரும் 22-ந்தேதிக்குள் தூக்கில் போடப்பட வேண்டும் என்று டெல்லி கோர்ட்டு உத்தரவிட்டதை அடுத்து அதற்கான ஏற்பாடுகள் திகார் ஜெயிலில் தீவிரமாக நடந்து வருகின்றன.

இந்தியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்படுவது எப்போதாவது அரிதாகவே நடக்கும். கடைசியாக 2015-ம் ஆண்டு மும்பை குண்டு வெடிப்பு கைதி யாகூப் மேமன் தூக்கில் போடப்பட்டான்.

எனவே, கைதிகளை தூக்கில் போடுவதற்கு என்று தனியாக எந்த ஜெயிலிலும் ஊழியர்கள் நிரந்தரமாக இருப்பது இல்லை.

அதே நேரத்தில் இதற்கென தற்காலிக ஊழியர்களை அந்த நேரத்தில் மட்டும் அழைத்து கொள்வது வழக்கம்.

குறிப்பாக சிலர் பரம்பரையாக இந்த பணியில் இருக்கிறார்கள். அவர்களைத்தான் இதில் ஈடுபடுத்துவார்கள்.

டெல்லி திகார் ஜெயிலில் இதற்கான ஊழியர்கள் இல்லை. அதே நேரத்தில் உத்தரபிரதேசம் மீரட் ஜெயிலில் பவான் ஜலாத் என்ற ஊழியர் இருக்கிறார். இவருடைய குடும்பத்தினர் 4 தலைமுறையாக தூக்கு தண்டனையை நிறைவேற்றும் ஊழியர்களாக பணியாற்றி வந்துள்ளனர்.

வெள்ளைக்காரர்கள் ஆட்சி காலத்தில் சுதந்திர போராட்ட வீரர்களான பகத்சிங், ராஜகுரு, சுக்தேவ் ஆகியோர் லாகூர் ஜெயிலில் தூக்கில் போடப்பட்டனர். அவர்களை பவான் ஜலாத்தின் தாத்தாதான் தூக்கில் போட்டார்.

அதைத்தொடர்ந்து அவரது பரம்பரையே இந்த தொழிலில்தான் இருக்கிறது.

மீரட்டில் பவான் ஜலாத் சைக்கிளில் பெட்ஷீட் வியாபாரம் செய்து வருகிறார். 4 குற்றவாளிகளையும் தூக்கில் போட தயாராக இருக்கும்படி ஏற்கனவே கடந்த மாதம் 16-ந்தேதி மீரட் ஜெயில் நிர்வாகத்தினர் அவரிடம் தெரிவித்து இருக்கிறார்கள்.

இந்த நிலையில் டெல்லி திகார் ஜெயில் நிர்வாகம் தூக்கில் போடும் பணியை செய்ய 2 ஊழியர்களை தயாராக வைத்திருக்கும்படி மீரட் ஜெயிலுக்கு ஏற்கனவே கடிதம் அனுப்பி உள்ளது.

அதைத் தொடர்ந்து மீரட் ஜெயில் நிர்வாகத்தினர் பவான் ஜலாத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

ஆனாலும், இனி திகார் ஜெயிலில் இருந்து மீரட் ஜெயிலுக்கு முறைப்படி கடிதம் அனுப்பப்படும். அதன் பின்னர் பவான் ஜலாத் திகார் ஜெயிலுக்கு அனுப்பி வைக்கப்படுவார்.

இது சம்பந்தமாக பவான் ஜலாத்திடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

“4 குற்றவாளிகளையும் தூக்கில் போடும் இந்த பணியை செய்வதற்கு நான் தயாராக இருக்கிறேன். இது போன்ற கொடிய குற்றவாளிகளை கொல்வதன் மூலம் சமுதாயத்துக்கு அழுத்தமான ஒரு செய்தியை சொல்வதாக அமையும்.

அவர்கள் மிக மோசமான செயலை செய்து இருக்கிறார்கள். அவர்களுக்கு மரண தண்னையை நிறைவேற்றுவதன் மூலம் அவர்களுடைய குடும்பத்தினருக்கும், அனைத்து மக்களுக்கும் ஒரு ஆறுதல் கிடைக்கும். எனவே, நான் இந்த பணியை மகிழ்ச்சியுடன் செய்வேன்.

ஏற்கனவே இந்த பணியை செய்ய தயாராக இருக்கும்படி மட்டும் தகவல் சொன்னார்கள். ஜெயில் நிர்வாகத்திடம் இருந்து முறைப்படி அழைப்பு வரவில்லை. அந்த அழைப்பு வந்ததும் நான் அதற்கு தயாராவேன்” என்று கூறினார்.

ஆனால், பவான் ஜலாத் இதுவரை யாரையும் தூக்கில் போட்டது இல்லை.

நிதாரி கொலை வழக்கு குற்றவாளி, சுரேந்தர் கோலியை தூக்கில் போடுவதற்காக 4 ஆண்டுகளுக்கு முன்பு அவரை அழைத்தார்கள்.

ஆனால், அந்த தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டு விட்டதால் அந்த தண்டனை நிறை வேற்றப்படவில்லை.

பவான் ஜலாத் மேலும் கூறும் போது, தூக்கில் போடும் பணிக்கான ஏற்பாடுளை செய்வதற்கு 2 அல்லது 3 மணி நேரம் தேவைப்படும். தூக்கில் போடும் கயிறு மற்றும் தூக்கு மேடை வலுவாக இருக்கிறதா? என்பதை சரிசெய்ய வேண்டும். மற்றும் பல முன்னேற்பாடு பணிகளும் இருக்கின்றன என்று கூறினார்.

ஆனால், இதுபோன்ற நபர்களை தூக்கில் போடுவதில் தனக்கு மனரீதியான அழுத்தம் எதுவும் இல்லை என்றும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *