Tamilவிளையாட்டு

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் சிறந்த வீரராக ராஸ் டெய்லர் தேர்வு

இந்த ஆண்டுக்கான நியூசிலாந்தின் சிறந்த வீரராக முன்னணி பேட்ஸ்மேன் ராஸ் டெய்லர் தேர்வு செய்யப்பட்டார். அதற்குரிய சர் ரிச்சர்ட் ஹாட்லீ பதக்கத்தை 3-வது முறையாக டெய்லர் பெற்றுள்ளார். விருதுக்கு கணக்கிடப்பட்ட காலக்கட்டத்தில் மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டியையும் சேர்த்து 2 சதம், 9 அரைசதம் உள்பட 1,389 ரன்கள் சேர்த்துள்ளார். இது நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சினின் ரன் குவிப்பை விட 200 ரன் அதிகமாகும்.

ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரர் விருதை வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுதி தட்டிச் சென்றார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி முதல்முறையாக ஆன்-லைன் மூலம் நடைபெற்றது. முன்னாள் வீரர் ரிச்சர்ட் ஹாட்லீ, ‘வீடியோ லிங்’ மூலம் டெய்லருக்கு புகழாரம் சூட்டினார்.

நியூசிலாந்து அணி 2015 மற்றும் 2019-ம் ஆண்டு உலக கோப்பை இறுதி ஆட்டங்களில் அடைந்த தோல்விகளால் ஏமாற்றம் அடைந்துள்ள ராஸ் டெய்லர் 2023-ம் ஆண்டு இந்தியாவில் நடக்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியிலும் (50 ஓவர்) விளையாடும் ஆவலில் உள்ளார்.

36 வயதான டெய்லர் கூறுகையில், ‘ஏற்றம், இறக்கம் நிறைந்தது என்றாலும் 2019-20-ம் ஆண்டு சீசன் எனக்கு வியப்புக்குரியதாகவே அமைந்திருக்கிறது. உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் ஆடினேன். ஆஸ்திரேலியாவில் ‘பாக்சிங் டே’ டெஸ்டில் பங்கேற்றது பெருமைமிக்க தருணம். அப்போது அங்கு நியூசிலாந்து ரசிகர்கள் அளித்த ஆதரவை ஒரு போதும் மறக்க முடியாது. தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்துவது மகிழ்ச்சி அளிக்கிறது.

இப்போதைக்கு ஓய்வு பெறும் எண்ணம் இல்லை. 2023-ம் ஆண்டு உலககோப்பையை வெல்ல வேண்டும் என்பதே எனது ஆசை. உத்வேகமும், மனரீதியாக தொடர்ந்து வலுவாக இருக்கும் போது 2023-ம் ஆண்டு உலக கோப்பையில் என்னால் ஆட முடியும். அதன் பிறகு வயது வெறும் நம்பர் தான். 2023-ம் ஆண்டு உலக கோப்பை போட்டி வரை தொடர்ந்து விளையாட முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இன்னும் எனது ஆட்டத்தில் முன்னேற்றம் காண விரும்புகிறேன்’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *