நியூசிலாந்து, இந்தியா இடையிலான முதல் ஒரு நாள் போட்டி நாளை தொடங்குகிறது

விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

இரு அணிகள் இடையேயான 5 போட்டிக் கொண்ட 20 ஓவர் தொடரை இந்தியா 5-0 என்ற கணக்கில் கைப்பற்றி ‘ஒயிட்வாஷ்’ செய்து புதிய சாதனை படைத்தது.

3 ஒருநாள் போட்டித்தொடரில் முதல் ஆட்டம் ஹேமில்டனில் நாளை (5-ந் தேதி) நடக்கிறது.

20 ஓவர் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தியது போல் ஒருநாள் போட்டித் தொடரிலும் இந்தியாவின் அதிரடி தொடருமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. விராட் கோலி அணி வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் உள்ளது.

நியூசிலாந்துக்கு எதிராக கடைசியாக ஆடிய 3 தொடரையும் கைப்பற்றி இந்தியா முத்திரை பதித்தது. 2016-ல் 3-2 என்ற கணக்கிலும் (இந்தியா), 2017-ல் 2-1 என்ற கணக்கிலும் (இந்தியா), 2019-ல் 4-1 என்ற கணக்கிலும் (நியூசிலாந்து) தொடரை வென்றது. தற்போது தொடர்ச்சியாக 4-வது தொடரை வெல்லும் வேட்கையில் இருக்கிறது.

அதிரடி தொடக்க வீரர் ரோகித்சர்மா காயத்தால் ஒரு நாள் போட்டி மற்றும் டெஸ்டில் விலகி இருப்பது அணிக்கு மிகப்பெரிய பாதிப்பே. இதனால் லோகேஷ் ராகுலும், அகர்வால் தொடக்க வீரர்களாக களம் இறங்குவார்கள். கேப்டன் விராட்கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், மனீஷ்பாண்டே ஆகியோரும் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியின் போது பவுன்சர் பந்து ஹெல்மட்டில் தாக்கியதால் ரி‌ஷப்பண்ட் அதிர்ச்சி அடைந்தார். இதனால் ராகுல் விக்கெட் கீப்பராக பணியாற்றினார். அவர் கீப்பிங்கில் சிறப்பாக செயல்பட்டதால் நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் தொடரில் ரி‌ஷப்பண்ட் நீக்கப்பட்டார்.

ஒரு நாள் தொடரிலும் அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்பது உறுதியில்லை. ரோகித்சர்மா இல்லாததால் ராகுல் தொடக்க வரிசைக்கு செல்வார். இதனால் மிடில் ஆர்டர் வரிசையில் ஒரு வேளை வாய்ப்பு கொடுக்கப்படலாம். அதே நேரத்தில் கேதர் ஜாதவும் மிடில் ஆர்டர் வாய்ப்பில் இருக்கிறார்.

பந்து வீச்சில் பும்ரா, முகமது‌ஷமி, ‌ஷர்துல் தாக்கூர், குல்தீப்யாதவ் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர்கள்.

வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி 20 ஓவர் தொடரில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுக்கும் ஆர்வத்தில் உள்ளனர்.

கேப்டன் வில்லியம்சன், முன்னாள் கேப்டன் டெய்லர், மார்ட்டின் குப்தில், ஜேம்ஸ் நீசம், டாம்லாதம், பென்னட் போன்ற சிறந்த வீரர்கள் அந்த அணியில் உள்ளனர்.

இந்திய அணி கடைசியாக ஆடிய 3 ஒரு நாள் தொடர்களிலும் (வெஸ்ட் இண்டீஸ்-2, ஆஸ்திரேலியா) வென்று இருந்தது. இரு அணிகளும் கடைசியாக உலக கோப்பை அரை இறுதியில் மோதி இருந்தன. இதில் ஏற்பட்ட தோல்விக்கு இந்தியா நாளை பதிலடி கொடுக்குமா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

நியூசிலாந்து அணி உலக கோப்பைக்கு பிறகு தற்போதுதான் ஒரு நாள் போட்டியில் ஆடுகிறது. இரு அணிகளும் சமபலத்துடன் மோதுவதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாளை ஆட்டம் இந்திய நேரப்படி காலை 7.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவி‌ஷனில் இந்தப் போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *