நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் தோல்வி! – 50 ஓவர் உலக கோப்பை தொடரில் நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது இலங்கை

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அங்கு முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2 – 0 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தது. அதைத்தொடர்ந்து இந்திய மண்ணில் அக்டோபர் மாதம் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் வென்ற நியூசிலாந்து 1 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. அதை தொடர்ந்து நடைபெற்ற 2-வது போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து 3-வது மற்றும் கடைசி போட்டி இன்று ஹமில்டன் நகரில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

நியூசிலாந்து அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இலங்கை அணி 41.3 ஓவரிலேயே 157 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. நியூசிலாந்து சார்பில் மாட் ஹென்றி, ஹென்றி ஷிப்லே, டார்ல் மிட்சேல் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர். அதை தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து அணி 59 ரன்னில் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில் வில் எங் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 86 ரன்கள் குவித்து வெற்றியை உறுதி செய்தார். அதனால் 32.5 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் எடுத்த நியூசிலாந்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று 2- 0 (3) என்ற கணக்கில் இத்தொடரை வென்றது.

இந்நிலையில் இந்தியாவில் அக்டோபர் மாதம் நடைபெறும் 2023 உலகக்கோப்பைக்கு நேரடியாக தகுதி பெற ஐசிசி ஒருநாள் சூப்பர் லீக் தொடரின் அங்கமாக நடைபெற்ற இந்த தொடரில் வெற்றியை பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய இலங்கை அணி இத்தொடரில் தோல்வியை சந்தித்ததால் 2023 ஒருநாள் சூப்பர் லீக் புள்ளி பட்டியலில் 9-வது இடத்தை பிடித்தது.

இதனால் இந்தியாவில் நடைபெறும் 2023 உலகக் கோப்பைக்கு இலங்கை அணி நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பை அதிகாரப்பூர்வமாக இழந்துள்ளது. இதன் காரணமாக 2023 அக்டோபருக்கு முன்பாக நடைபெறும் தகுதி சுற்றில் நெதர்லாந்து போன்ற கத்துக்குட்டிகளுடன் மோதி அதில் வென்றால் மட்டுமே 2023 உலக கோப்பைக்கு தகுதி பெற முடியும் என்ற நிலைமைக்கு இலங்கை தள்ளப்பட்டுள்ளது.