நாளை முழு ஊரடங்கு – இன்று சென்னை மீன் மார்க்கெட்டுகளில் குவிந்த மக்கள்

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருவதால் கடந்த 20-ந் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதேநேரத்தில் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி தமிழகம் முழுவதும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. இதனால் நாளை இறைச்சிக் கடைகள், மீன் மார்க்கெட், காய்கறி கடைகள், மளிகைக்கடைகள், டாஸ்மாக் மதுக்கடைகள், சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட அனைத்தும் மூடப்படும். இன்று இரவு 10 மணிக்கு தொடங்கும் ஊரடங்கு திங்கட்கிழமை அதிகாலை 4 மணிக்கு முடிவடையும்.

நாளை மீன் மார்க்கெட் மூடப்படுவதால் பொது மக்கள் இன்று மீன் வாங்க மார்க்கெட்டுகளில் அதிகளவில் திரண்டனர்.

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மீன் மார்க்கெட்டில் இன்று அதிகாலை முதலே பொதுமக்கள் மீன் வாங்க திரண்டனர். நாளை மீன் மார்க்கெட் கிடையாது என்பதால் இன்று சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட்டில் பொது மக்கள் கூட்டம் மிகவும் அதிகமாக காணப்பட்டது.

பொது மக்கள் அனைவரும் முககவசம் அணிந்தபடி மீன் வாங்க வந்தனர். மார்க்கெட்டுக்கு வந்த பொது மக்களுக்கு கைகளை சுத்தம் செய்ய கிருமிநாசினி வழங்கப்பட்டது. ஆனாலும் மீன் வாங்க வந்த பொதுமக்கள் இடையே சமூக இடைவெளி என்பது கேள்விக்குறியானது. பொதுமக்கள் ஒருவரையொருவர் இடித்தபடி தள்ளிக் கொண்டு மீன் வாங்கினார்கள்.

பொது மக்களின் முழு கவனமும் பேரம் பேசி மீன் வாங்குவதிலேயே இருந்தது. யாரும் கொரோனா தொற்று பரவலைப் பற்றி கவலைப்படவில்லை.

சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட் முழுவதுமே பொது மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மீன் வாங்க வந்த பொது மக்களிடம் முககவசம் அணிந்திருக்க வேண்டும், சானிடைசர் பயன்படுத்த வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்ற வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வினியோகித்தனர்.

ஆனால் சமூக இடைவெளி என்பதை பொது மக்கள் மறந்து மீன் வாங்கினார்கள். முககவசம் அணிந்தவர்களும் முழுமையாக அணியவில்லை. பலரது முககவசம் தாடையிலேயே தொங்கிக் கொண்டு இருந்தது. சிலர் மீன்களை பேரம் பேசும் போது முககவசத்தை விலக்கியபடி பேரம் பேசினார்கள். இதனால் கொரோனாவின் 2-வது அலை மிக தீவிரமாக பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கொரோனா 2-வது அலை மிக வேகமாக பரவி வரும் நிலையிலும், பலி எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையிலும் பொதுமக்கள் இன்னும் விழிப்புணர்வு இல்லாமல் மீன் மார்க்கெட்டுகளில் திரள்வது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

காசிமேடு மீன் மார்க்கெட்டில் மீன் வாங்குவதற்கு இன்று அதிகாலை முதலே கூட்டம் நிரம்பி வழிந்தது. வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை என்றாலே திருவிழா போல காசிமேடு மீன்பிடி துறைமுகம் காட்சியளிக்கும்.

நாளை முழு ஊரடங்கு என்பதால் இன்று சனிக்கிழமையே காசிமேடு மீன் மார்க்கெட் திருவிழா போல காட்சி அளித்தது. நாளை மீன் சாப்பிட விரும்புபவர்கள் இன்றே மீன்களை வாங்கி வைத்தனர்.

சென்னையில் மிகப்பெரிய மீன்பிடி சந்தையான காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் கடலில் இருந்து பிடித்து வரும் மீன்கள் படகில் இருந்து நேரடியாக வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் விற்பனை செய்வதால் காசிமேடு மீன்களுக்கு மவுசு அதிகமாக இருக்கிறது.

இதனால் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இன்று கூட்டம் அலைமோதியது.

கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் பல கட்டுப்பாடுகளை விதித்தனர். இருந்தாலும் மக்கள் மீன் வாங்குவதிலேயே அதிக ஆர்வம் காட்டினார்கள். முககவசம் இல்லாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் முண்டியடித்துக்கொண்டு மீன்களை ஏலம் எடுப்பதிலேயே குறியாக இருந்தனர்.

மேலும் தற்போது மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளதால் விசைப்படகுகள் எதுவும் கடலுக்கு செல்லாத நிலை உள்ளது. இந்நிலையில் பைபர் படகுகளில் பிடித்து வரப்படும் மீன்கள் குறைந்த அளவே உள்ளதால் மீன்களின் விலைகள் இருமடங்காக விற்கப்படுகிறது.

அருகிலுள்ள பழவேற்காட்டில் இருந்து இறால்கள் அதிகமாக வந்துள்ளது. சாதாரண நாட்களில் கிலோ 200 ரூபாய்க்கு விற்கப்படும் இறால் தற்போது 350 முதல் 400 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

ஆற்று மீன்களான கட்லா, பங்காஸ் ஏரி வவ்வால் மீன்கள் கிலோ ரூ.100-க்கு விற்பதால் பொதுமக்கள் அதனை வாங்குவதற்காக ஆர்வம் காட்டினர். இதனால் காசிமேடு மீன் சந்தையில் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

வானகரம் மீன் மார்க்கெட் இன்று அதிகாலை 4 மணிக்கே திறக்கப்பட்டது. இன்று இரவு 7 மணிவரை மீன் மார்க்கெட் செயல்படுகிறது. இங்கும் அதிகளவில் பொது மக்கள் குவிந்து மீன் வாங்கினார்கள். பலர் முககவசம் அணியவில்லை. சமூக இடைவெளியை பின்பற்றவில்லை.

இதேபோல் கொளத்தூரில் உள்ள மீன்மார்க்கெட்டிலும் இன்று பொது மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

நாளை மகாவீர் ஜெயந்தி என்பதால், இறைச்சிக் கடைகள் மூடப்படும் என்று மாநகராட்சி சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கும் வருகிறது. இதன் காரணமாக இறைச்சிக் கடைகளிலும் இன்று அசைவ பிரியர்கள் திரண்டனர்.

இன்று காலையிலேயே சிக்கன் மற்றும் மட்டன் விற்பனை செய்யும் கடைகளில் பொது மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அவர்கள் நீண்ட வரிசையில் நின்றபடி இறைச்சி வாங்கினார்கள். பல இடங்களில் சமூக இடைவெளி என்பது கேள்விக்குறியானது.