நான் டிடிவி திகரனின் ஆதரவாளர் இல்லை – எம்.எல்.ஏ கலைச்செல்வன் அறிவிப்பு

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கலைச்செல்வன். இவர் டி.டி.வி.தினகரன் ஆதரவாளராக செயல்பட்டு வந்தார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளராக இருந்து வந்தார்.

இதையடுத்து இவரிடம் விளக்கம் கேட்டு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பினார். தன்மீது நடவடிக்கை எடுக்ககூடாது என்று சுப்ரீம் கோர்ட்டில் கலைச்செல்வன் எம்.எல்.ஏ. மனு தாக்கல் செய்தார். அவர் மீது நடவடிக்கை எடுக்க தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

இந்தநிலையில் கலைச்செல்வன் எம்.எல்.ஏ. கடலூரில் மாவட்ட கலெக்டர் அன்புச்செல்வனை சந்தித்து தொகுதி வளர்ச்சிப் பணிகள் குறித்து மனு அளித்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

டி.டி.வி.தினகரன் அ.ம.மு.க.என்ற பெயரில் எப்போது தனிக்கட்சி ஆரம்பித்தாரோ அப்போதே அவருடனான தொடர்பை துண்டித்துவிட்டேன். அவருடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. அந்த கட்சியில் நான் உறுப்பினரும் இல்லை.

ஜெயலலிதா முதல்வராக வேண்டும் என்பதற்காகத்தான் மக்கள் எனக்கு வாக்களித்தனர். சசிகலாவை பொதுச்செயலாளர் ஆக்கியவர்கள் தான் அவரை முதல்-அமைச்சர் என்றனர். எம்.எல்.ஏ.க்கள் நாங்களும் அதனையே கூறினோம். சசிகலாவை நாங்கள் ஆதரிக்கிறோம்.

இரட்டை இலை சின்னம் எங்கு உள்ளதோ அங்குதான் இருப்பேன். முதல்வரை சந்திப்பதற்கு தற்போது அவசியம் ஏற்படவில்லை. அவசியம் ஏற்பட்டால் நிச்சயமாக அவரை சந்திப்பேன். சட்டசபையில் எப்போதும் அ.தி.மு.க.கொறடா உத்தரவுப்படியே நடந்து வந்துள்ளேன். அதற்கு எதிராக செயல்பட்டதில்லை.

ஆட்சியை நான் எப்போதும் எதிர்த்ததில்லை. ஆட்சிக்கு எதிராக செயல்பட்டதும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

பாராளுமன்ற தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தோல்வி அடைந்தது. இதையடுத்து அந்த கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பலர் டி.டி.வி.தினகரனை விட்டு விலகி அ.தி.மு.க.வில் சேர்ந்து வருகிறார்கள்.

இந்தநிலையில் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த கலைச்செல்வன் எம்.எல்.ஏ. அவருடன் எந்த தொடர்பும் இல்லை என்று அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *