நடிகை டாப்ஸிக்கு எதிரான காவல் நிலையத்தில் புகார்!

ஆடுகளம், காஞ்சனா 2, கேம் ஓவர் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்த நடிகை டாப்சிக்கு பாலிவுட்டில் ஏகப்பட்ட படங்கள் குவிந்து வருகின்றன. பிங்க் படத்தின் மூலம் அவருக்கு பாராட்டுக்கள் கிடைத்த நிலையில், பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இவர் தற்போது தமிழில் ஜெயம் ரவியின் ஜன கன மன படத்தில் நடித்து வருகிறார்.

சில தினங்களுக்கு முன்பு ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சியொன்றில் டாப்சி கலந்து கொண்டார். அப்போது அவர் கவர்ச்சியான ஆடை அணிந்து கழுத்தில் மகாலட்சுமி அம்மன் உருவத்துடன் கூடிய நெக்லஸ் ஒன்றை அணிந்திருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், கவர்ச்சி ஆடையில் கடவுள் உருவம் பொறித்த நெக்லஸை எப்படி அணியலாம் என்று வலைத்தளத்தில் அவருக்கு எதிராக நெட்டிசன்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில், நடிகை டாப்சி அணிந்திருந்த ஆடை மற்றும் அணிகலன் இந்து கடவுள் மற்றும் இந்து மதத்தின் மீது நம்பிக்கையை கொண்டிருப்பவர்களின் மனதை புண்படுத்தும் விதமாக இருப்பதாக கூறி பா.ஜ.க. எம்.எல்.ஏ. மகன் ஏக்லவ்யா கவுர் என்பவர் மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

இந்தப் புகார் குறித்து வழக்கு ஏதும் பதிவு செய்யப்படவில்லை என்றும், குற்றச்சாட்டு குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் ஆய்வாளர் கபில் சர்மா தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.