நடராஜன் ஆட்ட நாயகன் விருது பெறுவார் என்று நினைத்தேன் – ஹர்திக் பாண்டியா

ஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 194 ரன்கள் குவித்தது. டி நடராஜன் நேர்த்தியாக பந்து வீசி 20 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்ததால் இந்தியா ஆஸ்திரேலியாவை 200 ரன்னுக்குள் கட்டுப்படுத்தியது.

பின்னர் 195 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. ஹர்திக் பாண்ட்யா 22 பந்தில் 42 ரன்கள் விளாசி இந்தியா வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். இதனால் ஆட்ட நாயகன் விருது ஹர்திக் பாண்ட்யாவுக்கு வழங்கப்பட்டது.

ஆட்ட நாயகன் விருது வென்ற ஹர்திக் பாண்ட்யா கூறுகையில் ‘‘இந்த ஸ்கோரையும், விளையாட்டையும் உண்மையிலேயே பார்க்க விரும்பினேன். டார்கெட் பற்றி எங்களுக்கு பெரிய விஷயமே அல்ல. கடந்த ஐந்து போட்டிகளில் 80, 90, 100 என அடித்திருக்கிறோம். அதில் இருந்து எனக்கு தன்னம்பிக்கை கிடைத்தது.

ஒரு குழுவாக நாங்கள் நேர்மறையான ஆட்டத்தை விளையாட வேண்டும் என்று நம்பினோம். இது ஒவ்வொருவருக்கும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வாய்ப்பு கொடுத்தது. நடராஜன் ஆட்ட நாயகன் விருதை வாங்குவார் என்று நினைத்தேன். அவர் எங்களுக்கு 10 ரன்கள் குறைவாக இலக்கை நிர்ணயிக்க உதவினார்’’ என்றார்.