தொழில்நுட்ப கோளாறால் ஆன்லைன் மாதிரி தேர்வு ரத்து – சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு

சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அதனை சார்ந்த உறுப்பு கல்லூரி மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வு வருகிற 21-ந்தேதி தொடங்கி நடைபெற இருக்கிறது. முதல் முறையாக இறுதி செமஸ்டர் தேர்வு ஆன்லைனில் நடத்தப்பட உள்ளது.

90 நிமிடம் நடைபெறும் இந்த தேர்வை ஆன்லைனில் எழுத இருக்கும் மாணவர்கள் அதனை எப்படி எதிர்கொள்வது? என்பது குறித்து அறிந்து கொள்ள மாதிரி தேர்வு நடத்தப்படும் என்று சென்னை பல்கலைக்கழகம் ஏற்கனவே அறிவித்தது.

அதன்படி, 18 (நேற்று), 19-ந்தேதிகளில் (இன்று) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் நேற்று பிற்பகல் 2.30 மணி முதல் 4 மணி வரை மாதிரி தேர்வு நடக்க இருந்தது. இதற்காக மாணவர்களுக்கு லாக்கின் ஐ.டி. குறித்த அனைத்து தகவல்களும் அனுப்பப்பட்டது.

ஆனால் மாதிரி தேர்வு சரியான நேரத்தில் ஆரம்பிக்கவில்லை. மாலை 4 மணி வரை தேர்வு தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் ஏற்படவில்லை. தொழில்நுட்ப கோளாறு காரணமாக மாதிரி தேர்வை நடத்த முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மாதிரி தேர்வு நிறுத்திவைக்கப்படுவதாகவும், எப்போது மீண்டும் நடைபெறும் என்பது குறித்த தகவல் இன்று(சனிக்கிழமை) தெரிவிக்கப்பட இருப்பதாகவும் சென்னை பல்கலைக்கழகம் அறிவித்தது. இதனால் மாணவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

மாதிரி தேர்வுக்கே தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டால், இறுதி செமஸ்டர் தேர்வை எழுதும்போது இதேபோன்று பிரச்சனை வந்தால் மாணவர்களுக்கு சிக்கல் ஏற்படாதா? என்று கல்வியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.