தொலைக்காட்சி நேரலையில் பிரதமர் மோடியுடன் விவாதம் நடத்த தயார் – பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அழைப்பு

சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியும், இந்தியா-பாகிஸ்தான் இடையே எல்லை விவகாரம், பயங்கரவாதம் என பல பிரச்சினைகள் நீடித்து வருகின்றன.

மும்பை தாக்குதல், பதான்கோட் தாக்குதல், புல்வாமா தாக்குதல் என இந்தியாவில் நடந்த பல பயங்கரவாத சம்பவங்களுக்கு மூளையாக செயல்பட்டவர்களை பாகிஸ்தான் அரசு மறைமுகமாக ஆதரித்து வருகிறது. எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் அரசு துணை போகிறது என இந்தியா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.

இந்தியாவின் இந்தக் குற்றச்சாட்டை பாகிஸ்தான் அரசு மறுத்து வருகிறது.

இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், ரஷ்ய செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்தார். அப்போது, இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைக்காட்சி நேரலையில் விவாதிக்க தயாராக உள்ளேன். இந்த பேச்சுவார்த்தையால் இந்தியா, பாகிஸ்தான் இடையே நல்லுறவு ஏற்பட்டால், அது இரு நாடுகளில் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு நன்மை அளிக்கும் என தெரிவித்துள்ளார்.