தேர்தல் நிதி பத்திரங்கள் தாக்கல் செய்ய வேண்டும் – அரசியல் கட்சிகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் நிதி பெறுவதில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வருவதற்காக தேர்தல் பத்திரங்களை மத்திய அரசு கடந்த 2016ல் அறிமுகப்படுத்தியது. இந்திய குடிமக்கள், அமைப்புகள் யார் வேண்டுமானாலும் தேர்தல் பத்திரங்களை வாங்கி அரசியல் கட்சிகளுக்கு கொடுக்கலாம். இவற்றை அரசியல் கட்சிகள் வங்கியில் செலுத்தி பணமாக்கிக் கொள்ளலாம்.
இந்த தேர்தல் பத்திரம் திட்டத்தை எதிர்த்து தன்னார்வ தொண்டு நிறுவனமான ஜனநாயக சீர்த்திருத்த அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.
இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் வேணுகோபால், தேர்தல் நிதி பத்திரங்கள் வாங்கி, அதன்மூலமாக அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை கொடுப்பது என்பது, ரொக்கமாக கொடுப்பதை விட சிறந்தது என்றார். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், மறுநாள் உத்தரவு வழங்குவதாக கூறினார்.
அதன்படி இவ்வழக்கில் இன்று நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். அப்போது தேர்தல் நிதி பத்திரங்கள் மூலம் நன்கொடை பெற்ற அரசியல் கட்சிகள், நன்கொடையாளர்களின் பெயர்கள் மற்றும் பெறப்பட்ட தொகை உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் மே 30ம் தேதிக்குள் தாக்கல் செய்யவேண்டும் என தெரிவித்தனர். இந்த அறிக்கையை சீலிட்ட உறையில் வைத்து, தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டனர்.