தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை தொடர்கிறது – அமைச்சர் கடம்பூர் ராஜூ

கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:

கோவில்பட்டியில் ரூ.50 லட்சம் மதிப்பில் அறிவியல் பூங்கா அமைக்கப்பட உத்தரவு வந்துள்ளது. வரும் 11-ம் தேதி அதற்கான அடிக்கல் நாட்டு விழா நடக்கிறது. தென் மாவட்டத்தில் நெல்லைக்கு அடுத்தபடியாக கோவில்பட்டியில் தான் அறிவியல் பூங்கா அமைய உள்ளது. இதற்காக முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இது கோவில்பட்டிக்கு மட்டுமல்ல மாவட்டத்தை சேர்ந்த மாணவ, மாணவியர்களின் கல்விக்கு உறுதுணையாக இருக்கும்.

தேர்தல் அறிவிப்பு வரும் வரை கூட்டணி கட்சிகள் எப்படி வேண்டுமானாலும் மாறலாம். தே.மு.தி.க.வுடன் தொடர்ந்து பேசி வருகிறோம். பேச்சு வார்த்தையில் முடிவு ஏற்படவில்லை. நிலுவையில் உள்ளதே தவிர நாங்களோ, அவர்களோ முடித்து கொள்ளவில்லை. பேச்சுவார்த்தை தொடர்கிறது. இன்று அல்லது நாளைக்குள் நிலைப்பாட்டுக்கு வரலாம். இல்லையென்றால் தலைமை எப்படி வேண்டுமானாலும் முடிவு செய்யலாம். தலைமை விரும்புகின்ற வகையில் எங்கள் கூட்டணி அமையும்.

96-ம் ஆண்டு நாங்கள் வெற்றி வாய்ப்பை இழந்திருந்தபோது, 98-ல் மதவாத கட்சி என்று அனைவரும் பயந்த நேரத்தில், பா.ஜ.க.வுடன் ஜெயலலிதா கூட்டணி வைத்து தமிழகத்தில் 30 இடங்களில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது.

அவரது வழியில் தான் இன்றைக்கு கூட்டணி அமைத்து உள்ளோம். யாருடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்பது எங்கள் கட்சி விசயம். இதில் மற்றவர்கள் கருத்து சொல்லக்கூடாது. சரத்குமார் உள்ளிட்ட யார் வேண்டுமானாலும் தனியாக நிற்கலாம். கூட்டணி வைத்துக் கொள்ளலாம். அது அவர்கள் விருப்பம். தி.மு.க. கூட்டணி பற்றி கூட நாங்கள் விமர்சனம் செய்ததது கிடையாது.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பற்றி வைகோ கடுமையாக விமர்சனம் செய்தார். அதே போன்று கருணாநிதி உடல்நிலை சரியில்லமால் இருந்த போது பார்க்க சென்ற வைகோ அவமானப்படுத்தப்பட்டார். சாம்பல் கூட கோபாலபுரம் செல்லாது என்று வைகோ கூறினார். ஆனால் இன்றைக்கு கூட்டணி அமைத்துள்ளார். இதனை நாங்கள் விமர்சனம் செய்ததது கிடையாது.

அது அவர்களின் நிலைப்பாடு, விருப்பம். நாங்கள் அமைத்து இருப்பது கொள்கை கூட்டணி. ஏற்கனவே ஜெயலலிதா இருக்கும் போது, பா.ஜ.க., பா.ம.க. கூட்டணி அமைத்தார், அதே வழியில் தான் நாங்கள் கூட்டணி அமைத்து இருக்கோம், இதனை விமர்சனம் செய்ய அ.தி.மு.க.வினருக்கு உரிமை உண்டு தவிர மற்றவர்கள் இந்த கூட்டணியை விமர்சிக்க தார்மீக உரிமையில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *