திரைப்படங்கள் ரிலீஸின் போது கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டாம் – அமைச்சர் கடம்பூர் ராஜூ

வரும் நவம்பர் 10 ஆம் தேதி முதல் திரையரங்கங்கள் திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில், நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் அதன் தலைவர் பாரதிராஜா, புதிய திரைப்படங்களை வெளியிட சில கட்டுப்பாடுகளை வைத்தார்.

இந்த நிலையில், அமைச்சர் கடம்பூர் ராஜூ, திரைப்படங்கள் ரிலீஸின் போது கட்டுப்பாடுகளை விதிக்க கூடாது, என்று தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “தமிழகத்தில் வருகிற 10 ஆம் தேதி திரைப்படங்களை வெளியிடும்போது இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்டோர் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டாம். புதிய படங்களை வெளியிட்ட பிறகு விபிஎப் கட்டணம் விதிப்பது பற்றி பேசுவது சரியாக இருக்கும்.

திரையரங்குகளை திறக்க இன்னும் 5 நாட்களே உள்ளதால் உடனே பேசி தீர்வு காண்பது இயலாத காரியம், தமிழ்மொழியை எப்படி பாதுகாக்க வேண்டும் என்பது அதிமுகவிற்கு தெரியும்.

மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்த திமுகவினர் தமிழ்மொழியை தேசிய மொழியாக அறிவித்திருக்கலாமே.” என்று தெரிவித்துள்ளார்.