திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவுக்கு கொரோனா பாதிப்பு

நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை வீச தொடங்கி உள்ளது. தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் முடிந்தநிலையில், கொரோனா தொற்று வேகம் எடுத்துள்ளது.

தேர்தல் களத்தில் வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரித்த அரசியல் பிரமுகர்களும், வேட்பாளர்களும் கட்சி பாகுபாடின்றி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலுவும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளார். இதுகுறித்து அவருடைய மகன் டி.ஆர்.பி.ராஜா வெளியிட்ட ‘டுவிட்டர்’ பதிவில் கூறியிருப்பதாவது:-

எனது தந்தையார் டி.ஆர்.பாலுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது.

கடந்த ஒரு வாரமாக அவரை சந்தித்தவர்கள் தயவு கூர்ந்து கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

டி.ஆர்.பாலு சென்னை ஆயிரம்விளக்கு அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தி.மு.க. பொதுசெயலாளர் துரைமுருகன் கடந்த வாரம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். அவர் முதலில் வீட்டு தனிமையில் சிகிச்சை எடுத்துக் கொண்டார். பின்னர் அவர், சென்னை குரோம்பேட்டையில் உள்ள ரேலா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இந்தநிலையில் டாக்டர்கள் தொடர் சிகிச்சை காரணமாக துரைமுருகன் கொரோனாவில் இருந்து உடனடியாக பூரண குணமடைந்தார். இதையடுத்து அவர் நேற்று ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினார். சிறிது நாட்கள் வீட்டு தனிமையிலேயே இருக்குமாறு துரைமுருகனுக்கு டாக்டர்கள் அறிவுரை வழங்கி உள்ளனர்.

அரசியல்வாதிகள் அடுத்தடுத்து கொரோனாவின் பிடியில் சிக்கி வருவது, அரசியல் கட்சி பிரமுகர்கள், தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.