”தலைநிமிர்ந்து வருகிறேன்” – மு.கருணாநிதியின் பிறந்தநாளுக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வீடியோ

முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின், முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்தநாளை முன்னிட்டு ‘தலைநிமிர்ந்து வருகிறேன்’ என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள காணொலி பதிவில் பேசியுள்ள விவரம் வருமாறு:-

இன்று நீங்கள் பிறந்த சூன் 3!

இது உங்கள் பிறந்தநாள் மட்டுமல்ல

உடன்பிறப்புகள் அனைவரும் புத்துணர்ச்சி பெற்ற நாள்.

தனித்தனிப் பிறந்தநாள்கள் இல்லை.

எல்லோர்க்கும் பிறந்தநாள் இந்த சூன் 3!

வங்கக் கடலோரம் வாஞ்சை மிகு தென்றலின்

இந்த சூன் 3 நான் கம்பீரமாக வருகிறேன்.

உங்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி விட்டேன் என்று சொல்லத் தலைநிமிர்ந்து வருகிறேன்!

ஈரோட்டில் அன்றொருநாள் நான் ஏற்றுக்கொண்ட உறுதிமொழியை உடன்பிறப்புகளின் துணையோடு நிறைவேற்றிக் காட்டிவிட்டேன் என்பதை நெஞ்சை நிமிர்த்திச்சொல்ல வருகிறேன்.

தலைவருக்குக் கொடுத்த வாக்குறுதியை ஒரு தொண்டன் நிறைவேற்றிக்காட்ட வேண்டும் என்பதற்காகவே உழைத்தேன்!

நீங்கள் மறையவில்லை, மறைந்து இருந்து என்னைக் கவனிப்பதாகத் தான் எப்போதும் நினைப்பேன்.

இப்போதும் கவனித்துக் கொண்டுதான் இருப்பீர்கள்.

கோட்டையைக் கைப்பற்றிய அடுத்த நாளே கொரோனாவை விரட்டப் போராடிக் கொண்டு இருக்கிறோம்.

உழைப்பு, உழைப்பு, உழைப்பு என்று என்னை நீங்கள் உருவகப்படுத்தினீர்கள்.

அதற்கு உண்மையாக இருக்கவே உழைத்துக் கொண்டு இருக்கிறேன்.

‘யாரிடம் இருந்து பாராட்டு வரவில்லையோ அவர்கள் பாராட்டும் வகையில் நடந்து கொள்’ என்று!

உண்மையில் தலைவரே! தேர்தலில் நமக்கு வாக்களிக்கத் தவறியவர்கள் பலரது பாராட்டையும் இப்போது கழகத்துக்கு வாங்கித் தரும் வகையில் செயல்பட்டு வருகிறேன்.

செயல்படுகிறேன் என்றால் தனிப்பட்ட நானல்ல, என்னுள் இருந்து நீங்கள் தான் செயல்பட வைத்துக்கொண்டு இருக்கிறீர்கள்!

உங்கள் சொல் – எனக்கு சாசனம்!

உங்கள் வாழ்க்கை – எனக்குப் பாடம்!

உங்களது வார்ப்பான நான் இந்த சூன் 3 உங்களை வெற்றிச் செய்தியோடு சந்திக்க வருகிறேன்.

‘வாழ்த்துகள் ஸ்டாலின்’ என்று சொல்வீர்களா தலைவரே!

இவ்வாறு அந்த வீடியோவில் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.