தமிழக கிரிக்கெட் அணியின் வெற்றி நொடிகளை டிவி-யில் ரசித்து பார்த்த டோனி

சையது முஸ்தாக் அலி கோப்பைக்கான இறுதி ஆட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கர்நாடகா அணிகள் மோதின. டாஸ் வென்ற தமிழக அணி கேப்டன் விஜய் சங்கர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி, முதலில் பேட் செய்த கர்நாடகா அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 151 ரன்கள் எடுத்தது. அதிகமாக மனோகர் 46 ரன்கள் எடுத்தார்.

தமிழக அணி சார்பில் சாய் கிஷோர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து, 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தமிழகம் களமிறங்கியது. ஜெகதீசன் 41 ரன்னும், ஷரி நிஷாந்த் 23 ரன்னும் எடுத்து வெளியேறினர்.

இறுதிக் கட்டத்தில் அதிரடியாக ஆடிய ஷாருக் கான் தமிழக அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார். கடைசி ஓவரின் கடைசி பந்தில் 5 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஷாருக்கான் பந்தை சிக்சருக்கு பறக்க விட்டு தமிழக அணியை வெற்றி பெறச் செய்தார்.

இந்நிலையில், கடைசி பந்தில் ஷாருக் கான் சிக்சர் அடித்து அணியை வெற்றி பெற வைத்ததை முன்னாள் கேப்டன் டோனி ரசித்துப் பார்த்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.

பலமுறை சிக்சர் அடித்து அணியை வெற்றிபெற வைக்கும் உலகின் தலைசிறந்த ஃபினிஷர் என்று பெயர்பெற்ற டோனி, ஷாருக் கான் கடைசி பந்து சிக்சரை ரசித்த காட்சியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் டுவிட்டரில் பதிவிட்டுள்ளது.