தமிழக உள்ளாட்சி தேர்தல் – வெளியூரில் இருப்பவர்களுக்கு சொந்த ஊருக்கு வந்து வாக்களித்தனர்

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி முதல்கட்ட உள்ளாட்சி தேர்தல் இன்று நடைபெறுகிறது.

முதல் கட்டமாக 156 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 260 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 2,546 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 4,700 கிராம பஞ்சாயத்து தலைவர்கள், 37,830 பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் என 45 ஆயிரத்து 336 பதவிகளுக்கு ஆகிய பதவிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது.

இதற்காக 24 ஆயிரத்து 680 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன.

பலத்த பாதுகாப்புடன் இன்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று ஓட்டுப் போடுகின்றனர். வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஓட்டுப்போடுவதற்காக பலர் காலையிலேயே ஆர்வமுடன் வாக்குப்பதிவு மையங்களுக்கு வந்திருந்தனர். வயதானவர்கள் பலர் ஊன்றுகோல் உதவியுடன் மெதுவாக வாக்குச்சாவடிக்கு வந்து, தள்ளாத வயதிலும் ஜனநாயக கடமையை நிறைவேற்றினர். இளைஞர்களும், இளம் பெண்களும் ஆர்வமுடன் ஓட்டுப்போட்டனர். குறிப்பாக வெளியூர்களில் இருப்பவர்களும் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று வாக்கு செலுத்தி ஜனநாயக கடமையை ஆற்றினர்.

இந்த தேர்தலில் கிராம பஞ்சாயத்து உறுப்பினர் பதவிக்கு வெள்ளை நிற ஓட்டுச்சீட்டு வழங்கப்பட்டது. பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு இளஞ்சிவப்பு நிறத்தில் ஓட்டுச்சீட்டு அடிக்கப்பட்டு இருந்தது. ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு பச்சை நிற வாக்குச்சீட்டும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு மஞ்சள் நிற ஓட்டுச்சீட்டும் வாக்காளர்களுக்கு அளிக்கப்பட்டது.

சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 10 மாவட்டங்களை தவிர்த்து 27 மாவட்டங்களில் இன்று முதல் கட்ட தேர்தல் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *