Tamilசெய்திகள்

தமிழகம் குறித்து கருத்து கூற எனக்கு உரிமை இருக்கிறது – தெலுங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்

தெலங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

தமிழக மக்கள் பயன்பெறும் கருத்துகள் கூறியதற்கு விமர்சனம் செய்த முரசொலி பத்திரிக்கைக்கு எனது பதில் தமிழ் என் பெயரில் மட்டுமல்ல, உயிரிலும் இருக்கிறது. தமிழகத்தின் மகளான நான் மூக்கையும், வாலையும் தமிழகத்தில் நுழைய நீட்ட வேண்டியதில்லை. என் உடல், உயிர் அனைத்தும் தமிழ் மண்ணிற்கும், தமிழ் மக்களுக்கும் சொந்தமானது. அந்த வகையில் தமிழச்சியான எனக்கு எந்தவொரு கருத்தையும் கூறுவதற்கு முழு சுதந்திரம் உண்டு.

அதுவும் புதுச்சேரியில் பள்ளி கல்வி திட்டமும், தேர்வும் தமிழகத்தை சார்ந்து இருப்பதால் புதிய கல்விக்கொள்கையின் சிறப்பம்சங்களை எடுத்துக்கூறுவது என்ன தவறு. ஆளுநர்கள் அரசியலமைப்புக்கு உட்பட்டு கூறும் கருத்துக்களை அரசியலாக்குவதுதான் தவறு. மாணவர்களுக்கு நல்ல கருத்துக்களை விதைக்க வேண்டிய பட்டமளிப்பு விழாக்களை அரசியலாக்குவதுதான் தவறு. கருத்து சுதந்திரம் பற்றி பேசுபவர்கள் கடந்த காலங்களில் கருத்தை கருத்தாக எதிர்கொள்ளாமல் அதை மீம்ஸாக எதிர்கொண்டவர்கள் அதை மீண்டும் நினைவுபடுத்தி ரசிப்பது அவர்களுடைய மனநிலையை காட்டுகிறது. மீம்ஸ்களுக்கு அஞ்சுபவர் நான் அல்ல.

தெருவோர குடிமகனுக்கும் அரசியலமைப்பின்படி கிடைக்க வேண்டிய உரிமைகளை சிலர் மொழி வெறி கொண்டு தடுக்கும் போது அதை கண்டிப்பதும், காப்பதும் ஆளுநரின் கடமையே. தமிழக்தின் தென்தமிழ் கோடியான நாகர்கோவிலில் பிறந்த நான் தெலங்கானாவிற்கும்,புதுச்சேரிக்கும் ஆளுநராக பொறுப்பு வகித்தாலும் என் தாய் மண்ணில் நிகழ்ச்சிகளிலும், நிகழ்வுகளிலும் பங்குபெறுவது என் தமிழ் மக்களுக்கு நான் செய்யும் கடமை.

என் தமிழ் மக்கள் பயன்பெரும் வகையில் எந்தவொரு கருத்தையும் கூறுவதற்கு தமிழகத்தின் மகளாக எனக்கு முழு உரிமை உண்டு. மும்பை,டெல்லி போன்ற பகுதிகளுக்கு சென்று பணி புரியும் தமிழக மக்கள் தனது சொந்த ஊரில் ஏதேனும் திருவிழா என்றால் சொந்த ஊருக்கு வருவதைப் போன்று என் சொந்த ஊருக்கு வந்து நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதில் என்ன தவறு?

நான் ஆளுநராக இருக்கும் தெலங்கானாவில் இயங்கிவரும் நவோதயா பள்ளிகளின் பிரமாண்டமான செயல்பாடுகள் கண்டு என் தாய் தமிழகத்திலும் இல்லையே என்று வருந்துவதற்கு காரணம் அங்கே நவோதயா பள்ளியில் படிக்கும் மாணவர்களில் ஆண்டுக்கு 60 முதல் 80 மாணவர்கள் வரை நீட் தேர்வு மூலமாக மருத்துவராகும் வாய்ப்பு கிடைக்கிறது. மற்றும் பிற உயர்கல்வி தேர்வுகளிலும் வெற்றி பெறுகின்றனர். சாதாரண ஆட்டோ ஓட்டும் தொழிலாளிகளின் பிள்ளைகளும் ,ஏழை விவசாயிகளின் பிள்ளைகளும் நவோதயா பள்ளியில் படிப்பதால் நீட் தேர்வின் மூலம் மருத்துவராக வாய்ப்பு கிடைக்கிறது.

ஏழை,எளிய மாணவர்கள் கல்வி கற்க குறைவான கட்டணத்தில் உயரிய கல்வி பெற சேவை புரியும் நவோதயா பள்ளிகள் என் தாய் தமிழகத்தில் இல்லையே என்று ஏங்குவதில் என்ன தவறு? இதே நவோதயா பள்ளிகள் புதுச்சேரியிலும், காரைக்காலிலும் சிறப்பாக நடை பெற்றுக்கொண்டிருக்கிறது. அங்கே பொருளாதாரத்தில் பின்தங்கிய பல குழந்தைகள் கல்வி பயின்று வாழ்க்கையில் முன்னேறுவதை நான் நேரில் பார்த்து வருகிறேன். இங்கே நுழைவுத்தேர்வு வேண்டாம் என்கிறார்கள். இந்த காலக்கட்டத்தில் உலகம் முழுவதும் நுழைவுத் தேர்வுகள் உண்டு.ஏன் இங்கேயும் எல்கேஜி வகுப்பில் பிள்ளைகளை சேர்க்க பெற்றோருக்கு நுழைவுத்தேர்வு வைக்கும் நிலை வந்து விட்டது.

நுழைவு தேர்வே வேண்டாம் என்பதே சமூக நீதியா என்பது தெரியவில்லை . உதாரணமாக ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள வேண்டுமானால் பயிற்சி மேற்கொண்டு தயார் செய்துகொள்ள வேண்டும் அதை விட்டுவிட்டு நான் தயார் செய்துகொள்ளவில்லை என்று ஒலிம்பிக் போட்டியே வேண்டாம் என்பது என்ன நியாயம்? இங்கே தமிழகத்தில் என்ன நடக்கிறது என்பது கண் கூடாக பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம் ஏழைக்கு ஒரு கல்வி, பணக்காரர்களுக்கு ஒரு கல்வி. ஏழைக்குழந்தைகளுக்கு சமச்சீர் கல்வி பணக்காரக்குழந்தைகளுக்கு உயர்தர கல்வி. சமச்சீர் கல்வி பயிலும் குழந்தைகள் உயர்தர கல்வி பெற வேண்டும் என்பதே சரி. புதிய கல்விக்கொள்கை தற்போது எல்லோருக்கும் சமமாக இல்லாத கல்வியை தாய்மொழி கல்வியை முன்னிறுத்தி சமப்படுத்தும் என்பதே உண்மை நிலை.

தமிழக அரசியல்வாதிகளின் குழந்தைகள் எத்தனை பேர் சமச்சீர் கல்வி கற்கிறார்கள் என்பதை பட்டியலிடுங்களேன் பார்க்கலாம். உங்கள் வீட்டு குழந்தைகள் படிக்க கூடாத கல்வியை ஏழை,எளிய வீட்டு குழந்தைகளுக்கு படிக்க வேண்டும் என்று திணிக்கிறீர்கள். நீங்களே விரும்பாத கல்வியைத்தான் ஏழை, எளிய மக்கள் மீது திணிக்கிறீர்கள். உங்கள் வீட்டு பிள்ளைகள் உயர்தர கல்வி பயில்வதைப் போலவே ஏழை,எளிய வீட்டு குழந்தைகளும் குறைந்த செலவில் உயர்தர கல்வி கற்க கொண்டு வந்ததுதான் நவோதயா, கேந்திரிய வித்யாலயா போன்ற பள்ளிகள்.

புதிய கல்விக்கொள்கை மூலம் அனைவரும் ஏற்றம் பெறுவது உறுதி. ஏழை ,எளிய மாணவர்கள் பயன் பெறக் கூடாது என்பதற்காகவே நீங்கள் இந்தி திணிப்பு என்று மக்களை ஏமாற்றுகின்றீர்கள். இந்தி மொழி எதிர்ப்பை கூறியே நீங்கள் தமிழை வளர்ப்பதாக சொல்லி இன்னும் எவ்வளவு காலம்தான் மக்களை ஏமாற்ற முடியும். புதிய கல்விக் கொள்கையிலும் தாய் மொழிக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. விருப்பம் இருந்தால் வேறு ஒரு மொழியை கொள்ளலாம் என்று அறிவுறுத்துகிறது.

தூங்குபவரை எழுப்பலாம் தூங்குவது போல் நடிப்பவரை எழுப்ப முடியாது. அதைப் போல தான் இல்லாத ஒரு இந்தி திணிப்பை கூறுவது. ஒரு கதை சொல்வார்கள் அமாவாசை இரவில் கருப்பு கண்ணாடியை அணிந்து கொண்டு இல்லாத கருப்பு பூனையை தேடுவதைப் போல இல்லாத இந்தி திணிப்பை வைத்து மக்களை எவ்வளவு காலம் தான் ஏமாற்ற முடியும். என் வீட்டு குழந்தைகள் எல்லாம் உயர்தர கல்வி படிக்க வேண்டும்.

ஏழை,எளிய வீட்டு குழந்தைகள் சமச்சீர் கல்விதான் படிக்க வேண்டும் என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம் ? சமூகநீதி என்று சொல்லிக்கொண்டு குடியரசு தலைவர் தேர்தலில் பழங்குடியின சமுதாயத்தைச் சார்ந்தவருக்கு ஓட்டு போட மறுத்தவர்கள் ஆனால் சமூகநீதி பற்றி பேசும் கண்ணோட்டம் எப்படி என்பதை மக்கள் புரிந்து கொண்டு விட்டார்கள்.

தமிழிசை என்றும் தமிழிசையாக தான் இருப்பேன். இந்திசையாக மாறமாட்டேன் என்பதை உறுதியாக கூறுகிறேன். இந்தி திணிப்பு இந்தி திணிப்பு என்று இல்லாத ஒன்றை மக்கள் மீது கருத்து திணிப்பு செய்ய வேண்டாம். மோடி அரசு என்ன செய்தாலும் அதனுடைய நற்பயன்களும், பலன்களும் மக்களுக்கு வந்து சேர்ந்து விடக் கூடாது, அப்படி நற்பலன்கள் மக்களை சென்று சேர்ந்தாலும் அது மோடியின் பெயரால் வந்து விட கூடாது என்பதற்காகதான் நீங்கள் செய்யும் பல நிகழ்வுகள் காட்டிக் கொண்டு இருக்கிறது.

ஒரு முதல்வரும் கவர்னரும் ஒரு மித்த குரலில் மக்களுக்கு இணையாக இணைந்து பணியாற்றுவதை கண்டு பொறுக்காத சிலர் கவர்னர் ஆட்சியா சூப்பர் முதல்வரா என்று விமர்சனம் செய்கிறார்கள். வாரிசுகளை முன்னிறுத்தி குடும்ப ஆட்சி நடத்துபவர்கள் எல்லாம் மக்கள் நலனை முன்னிறுத்தி இணக்கமாக நடக்கும் ஆளுநரை புதுச்சேரியில் நடப்பது கவர்னர் ஆட்சி என்றும் சூப்பர் முதல்வர் என்றும் விமர்சிப்பதுதான் ஆச்சரியம். புதுச்சேரியில் சிறப்பான நல்லாட்சி நடைபெற்று “பெஸ்ட் புதுச்சேரி” என்று சொல்வதைப்போல தமிழகத்தின் நுழை வாயிலாக ஒரு சிறந்த நிர்வாகத்தின் ஆட்சியும் நடத்தி தமிழக மக்களை திரும்பி பார்க்க வைப்போம்.

கொரோனா காலத்தில் மக்கள் வாழ்வாதாரத்தை பாதிக்காமல் எல்லா மதத்தினரின் வழிபாட்டு தலங்களை திறந்து வைத்தே கொரோனாவை கட்டுப்படுத்தினோம். பெட்ரோல், டீசல் விலையை இரண்டு முறை குறைத்தோம் இதுதான் “புதுச்சேரி மாடல்” … இந்த “புதுச்சேரி மாடல்” என்று சொல்வது தான் நீங்கள் சொல்லும் மாடல்களுக்கு எல்லாம் உதாரணமாக வருங்காலத்தில் இருக்கப் போகிறது. என்னுடைய கருத்துக்கு ஒரு முழு பக்கம் பதில் எழுதும் போது தெரிகிறது. மக்கள் உண்மையை கண்டு பிடித்து விடுவார்கள் என்பதின் அச்சத்தின் காரணமாக தனி நபர் விமர்சனங்களை வைக்க வேண்டாம். கருத்தை கருத்தால் எதிர் கொள்ளுங்கள் பதில் சொல்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.