தமிழகத்துக்கு வெள்ள நிவாரண தொகையை உடனடியாக வழங்க வேண்டும் – சசிகலா வலியுறுத்தல்

சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-

கடந்த 2 வார காலமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களும், வேலூர், கன்னியாகுமரி, திருவாரூர், கடலூர் போன்ற மாவட்டங்களும் மழை வெள்ளத்தால் மிகவும் மோசமாக பாதிப்படைந்து உள்ளன. பல இடங்களில் ஏழை-எளிய மக்கள் தங்கள் குடிசை வீடுகளில் கழிவுநீர் கலந்த மழைநீர் தேங்கிய நிலையில் வாழ வழியின்றி மிகவும் துன்பப்படுகிறார்கள்.

பல இடங்களில் வீடுகள் இடிந்துள்ளன. வேலூர் மாவட்டத்தில் உள்ள பேர்ணாம்பட்டு என்ற இடத்தில் வீடு இடிந்து விழுந்ததில், 9 பேர் உயிரிழந்து உள்ளனர். தமிழக மக்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த பாதிப்புகளில் இருந்து மீண்டுவர மத்திய அரசு உரிய நிவாரண தொகையை தமிழகத்துக்கு உடனே வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

திருப்போரூர் இள்ளலூர் ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சசிகலா பார்வையிட்டார்.