தமிழகத்தில் 300 முகாம்களில் விடுபட்டவர்களுக்கு இன்று தடுப்பூசி போடப்படுகிறது

தமிழகத்தில் நேற்று மெகா சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன. 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முகாம்களில் பொதுமக்கள் ஆர்வத்துடன் சென்று தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

இதுதொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையின் பேரில் நடத்தப்பட்ட மெகா தடுப்பூசி முகாம்கள் மிகப்பெரிய பலன் கொடுத்துள்ளது.

மொத்தம் 28 லட்சத்து 91 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டுள்ளார்கள். இது இந்திய அளவில் வேறு எந்த மாநிலமும் எட்ட முடியாத சாதனை.

குறிப்பாக இந்த முகாம் பொதுமக்களிடையே விழிப்புணர்வு விழாபோல் மாறி இருக்கிறது. பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ள ஆர்வமும், வரவேற்பும் விரைவில் எல்லோரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் நிலையை எட்ட வைக்கும்.

இதுவரை 66 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசி போட்டுள்ளார்கள். மொத்தம் 6 கோடி பேருக்கு போட வேண்டும். அதில் 4 கோடியே 3 லட்சம் பேர் போட்டுள்ளார்கள்.

தடுப்பூசி கூடுதலாக கிடைத்தால் இன்னும் அதிக அளவில் போட முடியும். மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா தொலைபேசியில் தொடர்புகொண்டு சிறப்பு முகாம் பற்றி பாராட்டினார். தமிழக அரசு எடுத்துவரும் முயற்சிகள் சிறப்பாக உள்ளது என்றார்.

அதை தொடர்ந்து 13½ லட்சம் தடுப்பூசிகளை உடனடியாக அனுப்பி வைத்துள்ளார். மேலும் கூடுதலாக அனுப்பும்படி கோரிக்கை வைத்துள்ளோம்.

கடந்த ஆட்சியிலும் தடுப்பூசிகள் வந்தன. ஆனால் பொதுமக்களுக்கு போடுவதில் தீவிரம் காட்டவில்லை. தீவிரமாக செயல்பட்டு இருந்தால் இப்போது அனைவருக்கும் போட்டு இருக்க முடியும்.

80 சதவீதம் பேர் தடுப்பூசி எடுத்துக்கொண்டால் 3-வது அலை வந்தாலும் பயமில்லை.

நேற்றைய முகாம்களுக்கு ஒவ்வொரு பகுதிக்கு ஏற்ப குறிப்பிட்ட எண்ணிக்கையில் தடுப்பூசிகள் அனுப்பப்பட்டன. 300-க்கும் மேற்பட்ட முகாம்களில் எதிர்பார்த்ததைவிட அதிகமாக பொதுமக்கள் வந்ததால் சிலருக்கு போட முடியவில்லை. அவ்வாறு போட முடியாதவர்களிடம் தொடர்பு எண்களை அலுவலர்கள் வாங்கி உள்ளனர். அவர்களுக்கு இன்று ஊசி போடப்படுகிறது.

சிறப்பு முகாம்கள் நல்ல பலனை கொடுத்துள்ளதால் மீண்டும் குறிப்பிட்ட நாட்களை தேர்வு செய்து தடுப்பூசி முகாம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.