தமிழகத்தில் மழையால் 20 லட்சம் ஏக்கர் பயிர்கள் நாசம்

இயற்கை சீற்றங்களால் அதிகம் பாதிக்கப்படும் மாவட்டங்களில் கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்கள் தொடர்ந்து இடம் பிடித்து வருகிறது. கடந்த காலங்களில் ஏற்பட்ட புயல் சின்னங்களால் இந்த பகுதி பேரழிவை சந்தித்துள்ளன. அதிலும் கடந்த ஒரே மாதத்தில் அடுத்தடுத்து உருவான நிவர் மற்றும் புரெவி புயல்களால் அப்பகுதி விவசாயிகள் சொல்லொண்ணா துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புரெவி புயலாக மாறி பின்பு வலுவிழந்தாலும் அதன் தாக்கம் பலத்த மழையாக கொட்டித்தீர்த்து வருகிறது. இதனால் டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, திருச்சி, கடலூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

இதனால் டெல்டா மாவட்டங்களில் 10 லட்சம் ஏக்கரில் சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்களை மழைநீர் சூழ்ந்தது. இதில் 3 லட்சம் ஏக்கரில் தாளடி பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளது. இந்த தொடர் மழை காரணமாக சம்பா பயிர்களில் கரு சிதைவு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.

தஞ்சை மாவட்டத்தில் தொடர் மழையால் 21 ஆயிரத்து 758 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. இதேபோல் கடலை, சோளம், பருத்தி பயிர்களும் பாதிக்கப்பட்டுள்ளது. தஞ்சை, ஒரத்தநாடு, திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் பயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகையையொட்டி பயிரிடப்பட்ட கரும்புகள் 25 ஏக்கரில் சாய்ந்து கிடக்கிறது. அதே போல் 75 ஏக்கரில் நிலக்கடலையும், 75 ஏக்கரில் சோளப்பயிர்களும் வயலில் சாய்ந்து பாதிப்புக்குள்ளாகி உள்ளன.

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக கொட்டி தீர்த்த கனமழையால் 25 ஆயிரம் ஏக்கரில் பயிர்கள் நீரில் மூழ்கின. திருவாரூரில் உள்ள கூடூர் காற்றாற்றில் மழை வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. திருவாரூர் நாலுகால் மண்டபம் பகுதியில் ஒரு சில இடங்களில் தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்தன.

சம்பா, தாளடி பயிர்களில் தேங்கி நிற்கும் மழைநீரை வடிய வைக்க எவ்வித வசதியும் இல்லாததால் சுமார் 500 ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் முழுமையாக தண்ணீரில் மூழ்கி கிடக்கிறது.

நாகை அருகே ஓடம் போக்கி ஆற்றின் கரையில் உடைப்பு ஏற்பட்டதால் வயல்களில் தண்ணீர் புகுந்தது. மேலும் 100 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி வயல்கள் குளம் போல் காட்சி அளிக்கிறது.

சீர்காழி பகுதியில் தொடர் மழை காரணமாக 700 ஏக்கர் விளை நிலங்கள் தண்ணீரில் மூழ்கியதால் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுவரை எப்போதும் இல்லாத அளவுக்கு நேற்று பெய்த 21 செ.மீ. மழையால் விவசாயம் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது.

காவிரி டெல்டா மாவட்டங்களில் மழையால் மூழ்கி கிடக்கும் சம்பா, தாளடி, நெற்பயிர்கள், நிலக்கடை, சோளம், கரும்புகள் பயிரிடப்பட்டுள்ள வயல்களை அந்தந்த பகுதியின் வேளாண் அலுவலர்கள் பார்வையிட்டு வருகின்றனர். மேலும் வயல்களில் தேங்கிய தண்ணீரை வடிய வைக்க வடிகால் வசதிகளை மாவட்ட நிர்வாகத்தினர் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேபோல் குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்த மழை நீரை எந்திரம் மூலம் வெளியேற்றும் பணியிலும் மாவட்ட நிர்வாகத்தினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

மயிலாடுதுறை பகுதியில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வாய்க்கால்கள் மற்றும் ஆறுகளில் மழைநீர் நிரம்பி செல்கின்றன. ஒரு சில இடங்களில் வாய்க்கால் மற்றும் ஆறுகள் உடைப்பு எடுத்து வயல்வெளிகளை சூழ்ந்துள்ளது.

திருச்சி மாவட்டத்தில் திருவெறும்பூர், புள்ளம்பாடி ஆலம்பாடி, லால்குடி பகுதிகளில் நெற்பயிர்களில் மழை வெள்ளம் தேங்கி நிற்கிறது. திருவெறும்பூர் பகுதியில் 400 ஏக்கர், ஆலம்பாடியில் 150 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி இருப்பதாக மாவட்ட வேளாண்துறை இணை இயக்குனர் பெரியகருப்பன் இன்று தெரிவித்தார்.

மேலும் அவர் கூறும் போது, திருச்சியில் நேற்று 11.70 மி.மீட்டர் மழை பதிவானது. ஆனால் இன்று(சனிக்கிழமை) மாவட்டம் முழுவதும் 13.9 மி.மீட்டர் மழை மட்டுமே பதிவாகியுள்ளது. இதனால் நெற்பயிர்களில் சூழ்ந்துள்ள வெள்ளம் வடியத் தொடங்கியுள்ளது.

வாய்க்கால்களிலும் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இதில் மழை நீர் மட்டுமே ஓடிக்கொண்டிருக்கிறது. இன்றைய தினம் மழை பெய்யாவிட்டால் முழுமையாக நீர் வடிந்து விடும் என்றார்.

மொத்தத்தில் நிவர் மற்றும் புரெவி புயல்கள் விவசாயிகளை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. அரசு காலதாமதமின்றி உயர்மட்டக்குழு மூலம் ஆய்வு செய்து உடனடியாக நிவாரணம் மற்றும் இழப்பீட்டு தொகையினை வழங்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.