தமிழகத்தின் 6 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது

கொரோனா தொற்றின் 2-வது அலை கடந்த மார்ச் மாத இறுதியில் தமிழகத்தில் கால் பதித்தது. அன்று முதல் இன்று வரை தொற்றின் அலை நகர் பகுதி முதல் கிராம பகுதி வரை மின்னல் வேகத்தில் பரவி வருகிறது.

இதனை தடுக்க தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அரசின் நடவடிக்கை காரணமாக சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் பாதிப்பு குறைய தொடங்கியுள்ளது.

இருந்த போதிலும் சென்னையை தவிர பிற மாவட்டங்களில் தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக கோவை, திருப்பூர், ஈரோடு, மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் தொற்று பரவலின் விகிதம் தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது.

இந்த நிலையில் இந்த 6 மாவட்டங்களிலும் கொரோனா நோய் தடுப்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் 6 மாவட்ட கலெக்டர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.

கூட்டத்தில், குறிப்பிட்ட 6 மாவட்டங்களில் கொரோனா தொற்றின் தாக்கம் போதிய அளவு கட்டுப்படுத்தப்படாத சூழல் உள்ளது. எனவே இந்த மாவட்டங்களில் தொற்றை கட்டுப்படுத்தவும், இறப்புகளை குறைக்கவும் தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு தொற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார்.

மேலும் இந்த 6 மாவட்டங்களுக்கும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த ஐ.பி.எஸ். அதிகாரிகளை நியமித்தும் முதல்- அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

கோவை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக தொற்று பாதிப்பு 5 ஆயிரத்தை நெருங்கி கொண்டிருக்கிறது. நேற்று முன்தினம் தொற்று பாதிப்பில் சென்னையை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை கோவை மாவட்டம் பிடித்தது. இந்த நிலையில் நேற்று இதுவரை இல்லாத புதிய உச்சமாக 4 ஆயிரத்து 734 பேருக்கு தொற்று உறுதியாகி 2-வது நாளாக மாவட்டத்தில் முதலிடத்தை பிடித்துள்ளது. சென்னையை விட கோவையில் பாதிப்பு இருமடங்காக அதிகரித்துள்ளது. இதுவரை மாவட்டம் முழுவதும் 1 லட்சத்து 55 ஆயிரத்து 820 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை தீவிரமாக கண்காணிக்கின்றனர். அங்குள்ளவர்கள் வெளியே வர தடை விதித்துள்ளது. மேலும் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையும் தற்போது அதிகப்படுத்தப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்றை கண்காணிக்க நியமிக்கப்பட்ட தொற்று தடுப்பு கண்காணிப்பு அலுவலரும், வணிகவரித் துறை ஆணையருமான எம்.ஏ. சித்திக் நேற்று கோவை மாநகராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட மத்திய மண்டலம், மேற்கு மண்டலங்களில் ஆய்வு செய்தார்.

காந்திபுரம் பஸ் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட அவர் சுகாதார பணியாளர்கள் வீடு, வீடாக சென்று பொதுமக்களுக்கு பல்ஸ் ஆக்சி மீட்டர் மூலம் ஆக்சிஜன் அளவினை கண்டறியும் முறைகள் குறித்தும், தெர்மோ மீட்டர் மூலம் வெப்ப அளவினை கண்டறியும் முறைகள் குறித்தும் அறிவுரைகள் வழங்கினார்.

பின்னர் அவர் சுகாதார பணியாளர்கள் மத்தியில் பேசுகையில், ஒவ்வொரு ஊழியரும் தினமும் 100 வீட்டுக்கு செல்ல வேண்டும். அவர்கள் உங்கள் நண்பர்களாக நேசிக்கும் அளவுக்கு பரிச்சியமாக வேண்டும். உங்களது தொலைபேசி எண்ணை கொடுங்கள். அவர்களுக்கு சளி, காய்ச்சல், இருமல் இருக்கிறதா? என கேட்க வேண்டும்.

பாதிப்பு நாட்களின் எண்ணிக்கை மிக முக்கியம். தொற்று பாதிப்பு இருந்து ஆறாவது, ஏழாவது நாட்களை கடந்து விட்டால் மூச்சுத்திணறல் ஏற்படும். அவர்களை பற்றிய விபரங்களை மருத்துவ குழுவுக்கு தெரிவித்து காப்பாற்ற வேண்டும். சளி, காய்ச்சல் இருப்பின் பரிசோதனைக்கு பரிந்துரைத்து, உடல் நிலையை தொடர்ந்து கேட்டறிய வேண்டும் என்றார்.

தொடர்ந்து இன்று 2-வது நாளாக கோவையில் தொற்று தடுப்பு கண்காணிப்பு அலுவலரும், வணிக வரித்துறை செயலாளருமான எம்.ஏ. சித்திக் ஆய்வு மேற்கொண்டார்.

இதற்கிடையே மாவட்டத்தில் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட மாநில மற்றும் மாவட்ட அளவில் ஒருங்கிணைப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட உள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 2ஆயிரத்து 74 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வரை ஆயிரத்திற்குள் இருந்த தொற்று பாதிப்பு தற்போது 2 ஆயிரத்தை நெருங்கி 2 மடங்காக உயர்ந்துள்ளது.

இதையடுத்து தடுப்பு பணிகளை தீவிரமாக செயல்படுத்த திருப்பூர் மாவட்டத்திற்கு வேளாண்மைத்துறை செயலாளர் சமயமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று திருப்பூர் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை கிராமப்புறங்களில் அதிக அளவில் தொற்று பாதிப்பு உள்ளது. இதையடுத்து அங்கு தனிமைப்படுத்துதல் மையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. தொற்று பாதிக்கப்பட்ட கொரோனா நோயாளிகள் வெளியே செல்லாமல் இருக்க கட்டுப்பாடு பகுதிகள் தகரத்தால் அடைக்கப்பட்டுள்ளது. மேலும் யாருக்காவது தொற்று உள்ளதா? என்பதை கண்டறிய இன்று முதல் அங்கன்வாடி-சத்துணவு பணியாளர்கள் வீடு வீடாக சென்று பரிசோதனை மேற்கொள்கின்றனர்.

சேலம் மாவட்டத்தில் சுமார் 150-க்கும் மேற்பட்ட கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை சுகாதார துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். சேலம் மாநகர பகுதியில் மட்டும் 1,676 தெருக்களில் 99 இடங்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.

மாவட்டத்தில் கடந்த 3 நாட்களில் 18 வயது முதல் 44 வயதுடைய 31 ஆயிரத்து 299 பேருக்கு கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற வசதியாக அரசு மருத்துவமனையில் கூடுதல் படுக்கைகள் மற்றும் ஆக்சிஜன் படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.

ஈரோடு மாவட்டம் முழுவதும் 124 கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு 8,156 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளனர். முன்பு 2000 பரிசோதனை நடந்து வந்த நிலையில் தற்போது நாள் ஒன்றுக்கு 5000 வரை பரிசோதனை அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதேபோல் ஈரோடு மாவட்டம் முழுவதும் 500 வீடுகளுக்கு ஒரு பொறுப்பாளர் நியமிக்கப்பட்டு அவர்கள் வீடு, வீடாக சென்று சளி, காய்ச்சல் உள்ளதா என்று கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஈரோடு மாநகராட்சி வளாகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் ஒருங்கிணைந்த கொரோனா கட்டுப்பாட்டு அறை (வார்ரூம்) செயல்பட்டு வருகிறது. இங்கு சுழற்சி முறையில் தினமும் 30 பணியாயர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

திருச்சி மாவட்டத்தில் தினமும் சராசரியாக 6 ஆயிரம் பரிசோதனைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இன்று முதல் தொற்று பரவிய பகுதிகளை கண்டறிந்து அங்கு காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் நாள் ஒன்றுக்கு 7 ஆயிரம் வரை பரிசோதனை செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம் முழுவதும் தொற்று அதிகம் பாதித்த பகுதிகளை தனிமைப்படுத்தும் வகையில் பேரிகார்டுகள் அமைத்து தடுப்பு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

மதுரை மாவட்டத்தில் கொரோனாவுக்கு 846 பேர் பலியாகி உள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த மதுரையில் அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வீடு, வீடாக சென்று காய்ச்சல் பரிசோதனை செய்யும் பணி நடந்து வருகிறது. பல்வேறு இடங்களில் முகாம்கள் அமைத்து 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வார்டாக லாரிகள் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடந்து வருகிறது.

கொரோனா அதிகம் பாதித்த பகுதிகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு வெளியாட்கள் யாரும் நுழையாத வகையில் போலீசார் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.