தமிழகத்தின் 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் பெய்யக்கூடிய ஆண்டு மழைப்பொழிவில் அதிகளவிலான மழை வடகிழக்கு பருவமழை காலத்தில் தான் கிடைக்கிறது. அந்தவகையில் வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

இந்த வடகிழக்கு பருவமழை நேற்று முன்தினம் தமிழகத்தில் தொடங்கியதாக வானிலை ஆய்வு மையத்தால் அறிவிக்கப்பட்டது. வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்ய தொடங்கி இருக்கிறது.

அதிலும் குறிப்பாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் நேற்று முன்தினமும், நேற்றும் மழை வெளுத்து வாங்கி வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்றும் (வெள்ளிக்கிழமை) தமிழகத்தில் மழைக்கான வாய்ப்பு இருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் எஸ்.பாலச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணிநேரத்தில் (இன்று) வட கடலோர மாவட்டங்கள் மற்றும் தென்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும் காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், நெல்லை, தென்காசி, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடியுடன் விட்டு விட்டு மழை தொடரும். அவ்வப்போது ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில், ‘போலீஸ் டி.ஜி.பி. அலுவலகம் 18 செ.மீ., அண்ணா பல்கலைக்கழகம் 14 செ.மீ., வடசென்னை, செங்குன்றம் தலா 13 செ.மீ., சூரங்குடி 11 செ.மீ., வைப்பார், ராமேஸ்வரம் தலா 10 செ.மீ., அம்பத்தூர், பாம்பன் தலா 9 செ.மீ., ஆலந்தூர், சோழிங்கநல்லூர் தலா 8 செ.மீ., எண்ணூர், இந்துஸ்தான் பல்கலைக்கழகம், முதுகுளத்தூர், மண்டபம் தலா 7 செ.மீ., சென்னை விமானநிலையம், சத்யபாமா பல்கலைக்கழகம் பெரம்பூர், ஆர்.எஸ்.மங்களம், கமுதி தலா 6 செ.மீ., சோழவரம், சுரலக்கோடு, கோவிலங்குளம், பூண்டி, கடலாடி, எம்.ஜி.ஆர்.நகர், பரமக்குடி, கும்மிடிப்பூண்டி தலா 5 செ.மீ., விளாத்திக்குளம், கடல்குடி, கேளம்பாக்கம், தாமரைப்பாக்கம் தலா 4 செ.மீ., அருப்புக்கோட்டை, கள்ளிக்குடி, பொன்னேரி, வத்திராயிருப்பு, அம்பாசமுத்திரம், காரியாப்பட்டி, நாகர்கோவில், திருச்சுழி, திருமங்கலம், பெருஞ்சாணி அணை, பூந்தமல்லி, கோவில்பட்டி, எட்டயாபுரம் தலா 3 செ.மீ.’ உள்பட பல இடங்களில் மழை பெய்துள்ளது.