Tamilசெய்திகள்

தமிழகத்தின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 6 கோடி!

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2020-ன் வரைவு வாக்காளர் பட்டியலின்படி தமிழகத்தில் தற்போது 6 கோடியே ஆயிரத்து 329 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 2 கோடியே 96 லட்சத்து 46 ஆயிரத்து 287 பேர். பெண்கள் 3 கோடியே 3 லட்சத்து 49 ஆயிரத்து 118 பேர். மூன்றாம் பாலினத்தவர் 5,924 பேர். ஆண்களைவிட பெண்கள் 7 லட்சத்து 2 ஆயிரத்து 831 பேர் அதிகம்.

மாநிலத்திலேயே அதிக வாக்காளர்களை கொண்ட சட்டமன்ற தொகுதியாக 6 லட்சத்து 46 ஆயிரத்து 73 வாக்காளர்களுடன் சோழிங்கநல்லூர் தொகுதி உள்ளது. இந்த தொகுதியில் 3,25,028 ஆண்கள், 3,20,963 பெண்கள், 82 மூன்றாம் பாலினத்தவர் உள்ளனர். குறைந்த வாக்காளர்களை கொண்ட தொகுதியாக 1 லட்சத்து 69 ஆயிரத்து 620 வாக்காளர்களுடன் துறைமுகம் தொகுதி உள்ளது. இதில் 88,483 ஆண்கள், 81,087 பெண்கள், 50 மூன்றாம் பாலினத்தவர் உள்ளனர்.

வாக்காளர்களின் வசதிக்காக ஜனவரி 4, 5, 11, 12-ந்தேதிகளில் அந்தந்த வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். இந்த முகாம்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் மற்றும் இடமாற்றம் ஆகியவற்றுக்கான படிவங்கள் பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம்.

ஜனவரி 22-ந்தேதி வரை இந்த சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் மற்றும் இடமாற்றம் செய்ய உரிய படிவங்களை கீழ்க்கண்ட முறையில் சமர்ப்பிக்கலாம். அதன் விவரம் வருமாறு:-

* அலுவலக வேலை நாட்களில் வாக்குச்சாவடி நிலை அலுவலர், வாக்காளர் பதிவு அதிகாரி, உதவி வாக்காளர் பதிவு அதிகாரி அலுவலகங்களில் அளிக்கலாம்.

* சிறப்பு முகாம் நாட்களில் அந்தந்த வாக்குச்சாவடி அமைவிடங்களில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் அளிக்கலாம்.

* பெயர் சேர்த்தலுக்கான விண்ணப்பத்துடன், வசிப்பிட முகவரி மற்றும் வயது ஆகியவற்றுக்கான சான்றுகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ், ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, அரசு அல்லது அரசுசார் பொதுத்துறை பணியாளர்களுக்கு மேற்படி நிறுவனங்களின் மூலம் வழங்கப்பட்ட அடையாள அட்டை, வங்கி கணக்கு புத்தகம், பான் அட்டை, உழவர் அடையாள அட்டை, ஆர்.ஜி.ஐ. வழங்கிய என்.பி.ஆர். ஸ்மார்ட் அட்டை, சமீபத்திய குடிநீர், தொலைபேசி, மின்சாரம், சமையல் எரிவாயு இணைப்பு ரசீது ஆகிய ஆவணங்களில் ஏதேனும் ஒன்றின் நகலை முகவரி சான்றாக சமர்ப்பிக்கலாம்.

வயது சான்றாக பிறப்புச் சான்றிதழின் நகல் அல்லது பள்ளிச் சான்றிதழின் நகல் அளிக்கப்படலாம். 25 வயதுக்கு கீழுள்ள மனுதாரர்கள் வயது சான்றிதழை அளிக்க வேண்டியது கட்டாயம். www.nvsp.in என்ற இணையதளம் மூலமாகவும், ‘வாக்காளர் உதவி’ செல்போன் செயலி ( VO-T-ER HE-LP LI-NE ) மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

* 1.1.2020 அன்று 18 வயது நிறைவடைந்தவர்களும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்களும், பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்.

* வாக்காளரின் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்து, அவருடைய வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை தொலைந்திருந்தால் வட்டாட்சியர் அல்லது மண்டல அலுவலகத்தில் படிவம் 1 பெற்று விண்ணப்பிக்கலாம்.

* வெளிநாட்டில் வாழும் இந்தியர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட, சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அதிகாரியிடம் படிவம் 6ஏ நேரில் அளிக்கவேண்டும் அல்லது வாக்காளர் பதிவு அதிகாரிக்கு தபாலிலும் படிவத்தை அனுப்பலாம். வாக்காளர் பதிவு அதிகாரியிடம் படிவம் 6ஏ நேரில் அளிக்கும்போது அதனுடன் விண்ணப்பதாரரின் புகைப்படம், பிற விவரங்களுடன் விசாவின் செல்திறன் பற்றிய மேற்குறிப்பு அடங்கிய பாஸ்போர்ட்டின் தொடர்புடைய பக்கங்களின் ஒளிநகலையும் (ஜெராக்ஸ்) சேர்த்து அளிக்கவேண்டும். வாக்காளர் பதிவு அதிகாரி மூல கடவுசீட்டை ஒப்பிட்டு சரிபார்த்து உடனடியாக திரும்பக் கொடுத்துவிடுவார். படிவம் 6ஏ தபாலில் அனுப்பப்படும்போது, கையெழுத்திடப்பட்ட பாஸ்போர்ட்டின் நகல்கள் (ஜெராக்ஸ்) இணைக்கவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *