Tamilசெய்திகள்

தண்ணீர் தட்டுப்பாடு எதிரொலி! – தமிழக ஓட்டல்களில் மதியம் சாப்பாடு நிறுத்தம்?

தமிழகத்தில் கடந்த 2 வருடமாக பருவமழை பெய்யாததால் ஏரி, குளங்கள், கால்வாய்கள், கல்குவாரிகள் உள்ளிட்ட அனைத்து நீர் நிலைகளும் வறண்டு போயின. இதனால் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.

நிலத்தடி நீர் மட்டமும் குறைந்து போனதால் ஆழ்துளை கிணறுகள் முற்றிலும் பயன்படாமல் போனது.

மக்கள் குடிநீருக்காக இரவு, பகலாக தவமாய் காத்து கிடந்து தண்ணீரை பிடித்து வரும் நிலை உள்ளது. சென்னை நகருக்கு குடிநீர் வழங்கிய 4 ஏரிகளும் வறண்டு விட்டதால் வீராணம் ஏரி, கல்குவாரி தண்ணீர், விவசாய கிணறுகள் மூலம் தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. தலைநகர் சென்னையில் தண்ணீர் பிரச்சினையை தீர்க்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

குடிநீர் வாரியம் லாரிகளில் அனைத்து பகுதிகளுக்கும் இலவசமாக தண்ணீர் சப்ளை செய்து வருகிறது. அடுக்குமாடி குடியிருப்புகளுக்கும் தனி வீடுகளுக்கும் மொத்தமாக குடிநீர் தேவைப்படுவோர் ஆன்லைன் மூலம் புக் செய்து பெற்று வருகின்றனர்.

ஓட்டல்கள், தனியார் மருத்துவமனைகள், ஐ.டி. நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு தனியார் லாரிகள் மூலம் தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது. பெரிய லாரிகள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டாலும் தேவையான அளவிற்கு கிடைக்கவில்லை. சாதாரண ஓட்டல்கள் முதல் நட்சத்திர ஓட்டல்கள் வரை தண்ணீர் பிரச்சினையால் தத்தளிக்கின்றன.

சென்னையை ஒட்டியுள்ள புறநகர் பகுதியில் இருந்து தண்ணீரை லாரிகளில் பிடித்து தனியார்கள் ஓட்டல்களுக்கு வழங்கி வருவதற்கு கிராமப்பகுதியில் எதிர்ப்பு கிளம்பியது. நிலத்தடி நீர் மட்டம் குறைந்து விடும் என்பதால் லாரிகளில் தண்ணீர் பிடிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் செய்ததால் ஓட்டல்களுக்கு தண்ணீர் சப்ளை செய்வது பாதிக்கப்பட்டது.

இதனால் சென்னையில் உள்ள ஓட்டல்களில் தண்ணீர் பிரச்சினை தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. அதிக விலை கொடுத்தாலும் தண்ணீர் கிடைக்கவில்லை என்று ஓட்டல் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஓட்டல்களுக்கு தண்ணீர் தேவை அதிகம் இருப்பதால் அதனை சமாளிக்க முடியாமல் தடுமாறுகின்றனர். காலை, மாலையில் வழங்கப்படும் டிபன்களுக்கு தேவைப்படும் தண்ணீரை விட மதிய சாப்பாட்டிற்கு தான் அதிகளவு தேவைப்படுகிறது என்கிறார்கள்.

தேவையான அளவு தண்ணீர் கிடைக்காததால் பிரச்சினை தீரும் வரை மதிய சாப்பாட்டு விற்பனையை நிறுத்தலாமா என்று ஆலோசித்து வருகிறோம் என்று சென்னை ஓட்டல்கள் சங்க தலைவர் ரவி தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:-

இட்லி, தோசை, பூரி டிபன் வகைகள் தயாரிக்க தண்ணீர் அதிகளவு பயன்படாது. மதியம் சாப்பாட்டிற்கு தேவையான அரிசி முதல் சாம்பார், ரசம், மோர் இவை அனைத்திற்கும் தண்ணீர் அதிகளவு தேவை.

மேலும் கூட்டு, பொரியல் என 10-க்கும் மேற்பட்ட சிறு சிறு பாத்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றை கழுவதற்கு தண்ணீர் அதிகளவு செலவாகும். 12 ஆயிரம் லிட்டர் டேங்கர் தண்ணீர் தொடக்கத்தில் ரூ.1800-க்கு கொடுத்தனர். பின்னர் ரூ.2500 ஆக உயர்த்தப்பட்டது. இப்போது தண்ணீர் தட்டுப்பாடு அதிகமாக இருப்பதால் ரூ.5000 வரை கேட்கிறார்கள். இந்த விலையிலும் தண்ணீர் கிடைக்காததால் ஓட்டல் நடத்துவதில் சிரமம் ஏற்படுகிறது.

சாப்பாடு விலையை விட தண்ணீருக்கு செலவழிக்கின்ற தொகை அதிகமாக இருப்பதால் தண்ணீர் பிரச்சினை இன்னும் அதிகமானால் மதிய சாப்பாடு விற்பனையை நிறுத்துவது தவிர வேறு வழியில்லை. மதிய சாப்பாட்டை நிறுத்தினால் பெருமளவு தண்ணீர் செலவு குறையும் என்று எதிர்பார்க்கிறோம்.

அதே நேரத்தில் வெளியூர்களில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் வரும் பயணிகளுக்கு மதிய உணவுக்காக மாற்று ஏற்பாடு தான் செய்ய வேண்டும். தொடர்ந்து தண்ணீர் பிரச்சினை அதிகரித்தால் இந்த முடிவை தான் ஓட்டல் உரிமையாளர்கள் எடுக்க வேண்டியது வரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ்நாடு ஓட்டல் உரிமையாளர் சங்க தலைவர் சுப்பாராவ் கூறுகையில், தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ள இந்த நேரத்தில் எல்லா ஓட்டல்களிலும் மழை நீர் சேகரிப்பு மையங்களை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். நிலத்தடி நீர் மட்டம் குறைந்து விட்டதால் நாம் இந்த ஏற்பாட்டினை உடனே செய்தால் வரும் காலங்களில் குடிநீர் பிரச்சினையை தவிர்க்கலாம்.

தமிழகம் முழுவதும் தண்ணீர் பிரச்சினை இருப்பதால் மதியம் மட்டும் சாப்பாடு விற்பனையை நிறுத்தலாமா? என்று ஆலோசித்து வருகிறோம் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *