தடையை மீறி திமுக கூட்டணி கட்சிகள் உண்ணாவிரத போராட்டம்

டெல்லியில் கொரோனா காலத்திலும் உயிரைத் தியாக வேள்வியாக முன்னிறுத்தி, அறவழியில் போராடி வரும் விவசாயிகளுக்கும் – அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு ஆதரவு அளித்தும் இன்று சென்னை – வள்ளுவர் கோட்டத்தில் காலை 8.00 மணி முதல் மாலை 5.00 வரை அறவழியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சித் தலைவர்களும் – பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்கும் ஒரு நாள் அடையாள “உண்ணாநிலைப் போராட்டம்” நடைபெறும் என்று திமுக, கூட்டணி கட்சியினர் தெரிவித்து இருந்தனர்.

கொரோனா காரணமாக 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் உண்ணாவிரதத்துக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை.

ஆனால் தடையை மீறி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக, கூட்டணி கட்சியினர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலையில் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பச்சை நிற மாஸ்க் அணிந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

உண்ணாவிரதத்தில் முத்தரசன், கனிமொழி, பாரிவேந்தர், ரவிபச்சமுத்து, வைகோ, திருநாவுக்கரசர், வேல்முருகன் உள்ளிட்ட தலைவர்களும் பங்கேற்றுள்ளனர்.