டெஸ்ட் கிரிக்கெட் வீரர்கள் தரவரிசை – மீண்டும் முதலிடம் பிடித்த கேன் வில்லியம்சன்

டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டது.

இதில் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் 2-வது இடத்தில் இருந்த நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் மீண்டும் ‘நம்பர் ஒன்’ அரியணையில் ஏறியுள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிஆட்டத்தில் 49 மற்றும் 52 ரன்கள் வீதம் எடுத்து தங்கள் அணி மகுடம் சூடுவதில் முக்கிய பங்காற்றிய அவர் 15 புள்ளிகள் கூடுதலாகப் பெற்று மொத்தம் 901 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறார்.

இதனால் முதலிடத்தில் இருந்த ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் சுமித் (891 புள்ளி) 2-வது இடத்துக்கு இறங்கியுள்ளார். ஆஸ்திரேலியாவின் லபுஸ்சேன் (878 புள்ளி) 3-வது இடத்திலும், இந்திய கேப்டன் விராட் கோலி 4-வது இடத்திலும் (812 புள்ளி), இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் (797 புள்ளி) 5-வது இடத்திலும் மாற்றமின்றி நீடிக்கிறார்கள்.

பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் முதல் 3 இடங்களில் ஆஸ்திரேலியாவின் கம்மின்ஸ், இந்தியாவின் அஸ்வின், நியூசிலாந்தின் டிம் சவுதி அப்படியே தொடருகிறார்கள்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் சோபிக்கத் தவறிய இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா ஆல் ரவுண்டர்களின் தரவரிசையில் முதலிடத்தில் இருந்து 3-வது இடத்துக்கு சறுக்கியுள்ளார். வெஸ்ட் இண்டீசின் ஜேசன் ஹோல்டர் மீண்டும் முதலிடத்துக்கு வந்துவிட்டார்.