டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை – விராட் கோலி 5வது இடத்தில் நீடிப்பு

டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது. இதில், பேட்ஸ்மேன்களில் இந்திய கேப்டன் விராட் கோலி 5- வது இடத்திலும், ரிஷப் பண்ட் மற்றும் ரோகித் சர்மா கூட்டாக இணைந்து 6-வது இடத்திலும் நீடிக்கின்றனர்.

ஜூன் 18-ம் தேதி தொடங்கும் நியூசிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விராட் கோலி தலைமையில் இந்தியா களமிறங்க உள்ளது. 6-வது இடத்தைப்  பெற்றுள்ள பந்த் மற்றும் ரோகித் தலா 747 மதிப்பீட்டு புள்ளிகளைப் பெற்றுள்ளனர்.

பந்துவீச்சாளர் தரவரிசையில் தமிழக வீரர் அஸ்வின் மட்டும் 2-வது இடத்தில் நீடித்து, டாப் 10 வரிசையில் இருக்கும் ஒரே இந்திய வீரர் ஆவார்.

அதேபோல் ஆல்-ரவுண்டர் தரவரிசையில் இந்திய வீரர்கள் ரவீந்திர ஜடேஜா 2-வது இடத்திலும், ரவிச்சந்திரன் அஸ்வின் 4-வது இடத்திலும் தொடர்ந்து நீடிக்கின்றனர்.

347 பந்துகளில் 200 ரன்கள் எடுத்த நியூசிலாந்தின் டெஸ்ட் அறிமுக வீரர் டேவன் கான்வே டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் 447 புள்ளிகளுடன் 77-வது இடத்தில் நுழைந்துள்ளார். நியூசிலாந்தின் கேப்டன் கேன் வில்லியம்சன் 895 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.