டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியல் – 3 வது இடத்திற்கு தள்ளப்பட்ட இந்திய அணி

டெஸ்ட் கிரிக்கெட் அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் ஆஸ்திரேலிய அணி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது. 119 புள்ளிகளுடன் ஆஸ்திரேலிய அணி முதலிடத்திலும், 117 புள்ளிகளுடன் நியூசிலாந்து அணி 2ம் இடத்திலும் உள்ளன. 116 புள்ளிகளுடன் இந்திய அணி 3ம் இடத்தில் உள்ளது. ஆஷஸ் தொடரில் படுதோல்வி அடைந்த இங்கிலாந்து அணி 101 புள்ளிகளுடன் 4ம் இடத்தில் உள்ளது.

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்ற இந்திய அணி, ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வென்ற நியூசிலாந்து அணியை பின்னுக்குத்தள்ளி முதலிடத்தை பிடித்திருந்தது. அதன்பின்னர் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் மட்டும் வெற்றி பெற்ற இந்திய அணி, அடுத்த 2 டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வியடைந்து தொடரை இழந்தது. இதனால் தரவரிசையில் மூன்றாவது இடத்திற்கு சென்றது. தென் ஆப்பிரிக்க அணி 99 புள்ளிகளுடன் 5வது இடத்திற்கு முன்னேறியது.

இந்திய அணி தோல்வியடைந்த அதேவேளையில், ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்துக்கு எதிராக அபாரமாக விளையாடி 4-0 என ஆஷஸ் தொடரை வென்றது ஆஸ்திரேலிய அணி. எனவே ஆஸ்திரேலிய அணி முதலிடத்திற்கு முன்னேறியது.

பாகிஸ்தான் அணி ஒரு இடம் சரிந்து, 6வது இடத்திலும், இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், வங்சதேசம், ஜிம்பாப்வே ஆகிய அணிகள் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.