டெஸ்ட் கிரிக்கெட்டை 4 நாட்களாக குறைப்பதற்கு சச்சின் எதிர்ப்பு!

சர்வதேச கிரிக்கெட் சங்கம் ஐந்து நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியை நான்கு நாட்களாக குறைக்க பரிசீலனை செய்து வருகிறது. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா கிரிக்கெட் சங்கங்கள் இதற்கு ஆதரவு தெரிவித்த போதிலும் முன்னணி கிரிக்கெட் வீரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

இந்திய அணி கேப்டன் விராட் கோலி ‘‘தற்போது நான்கு நாட்கள் என்று சொல்கிறார்கள். அதற்கு பின் மூன்று, இரண்டு என்பார்கள். பின்னர் டெஸ்ட் போட்டி தேவையில்லை என்பார்கள்’’ என தனது கருத்தை வலியுறுத்தியிருந்தார்.

இந்நிலையில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கரும் நான்கு நாள் டெஸ்ட் போட்டிக்கு தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து சச்சின் தெண்டுல்கர் கூறுகையில் ‘‘ஐந்தாவது நாள் ஆட்டத்தில் ஆடுகளத்தின் கடினத்தன்மை குறைந்து வெடிப்புகள் உருவாகும். இது சுழற்பந்து பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். இதை சுழற்பந்து வீச்சாளர்கள் எதிர்பார்த்து கொண்டிருப்பார்கள். இது டெஸ்ட் கிரிக்கெட்டின் ஒரு பகுதி.

சுழற்பந்து வீச்சாளர்களின் சாதகத்தை பறிப்பது நியாயம் தானா?. டி20 கிரிக்கெட் இருக்கிறது. ஒருநாள் கிரிக்கெட் இருக்கிறது. தற்போது டி10 கிரிக்கெட் வந்துள்ளது. 100 பால் கிரிக்கெட் வர இருக்கிறது. கிரிக்கெட்டில் டெஸ்டுதான் தூய்மையான வடிவம். அதில் கறை பட்டுவிடக் கூடாது’’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *