டெல்லியில் பதுங்கியிருக்கும் கே.டி.ராஜேந்திர பாலாஜி? – தனிப்படை போலீஸ் தீவிர விசாரணை

முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.3 கோடி பணம் மோசடி செய்ததாக புகார் கூறப்பட்டது.

இந்த புகார் குறித்து விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகரன் உத்தரவின்பேரில் போலீசார் விசாரணையை தொடங்கினர்.

இந்த நிலையில் முன் ஜாமீன் கேட்டு ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்த மனுவை கோர்ட்டு தள்ளுபடி செய்ததை தொடர்ந்து அவர் தலைமறைவாகி விட்டார். அவரை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

மதுரை, ஸ்ரீவில்லிபுத்தூர், கடலூர் என தமிழகம் முழுவதும் பலரிடம் கே.டி.ராஜேந்திர பாலாஜி வேலைக்காக பணம் பெற்றதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

இதுவரை கே.டி.ராஜேந்திர பாலாஜி மற்றும் அ.தி.மு.க. முன்னாள் ஒன்றிய செயலாளர் விஜய நல்லதம்பி, அவரது மனைவி மாலதி, வேல்முருகன் உள்பட பலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

தற்போது கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது கூடுதலாக ரூ.73 லட்சம் மோசடி புகார் வந்திருப்பதாக மாவட்ட குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்த புகார்கள் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புகார் கொடுத்தவர்களிடம் முதல் கட்டமாக போலீசார் நேரடி விசாரணையை தொடங்கி உள்ளனர். எந்த பணிக்காக யார் மூலம் பணம் கொடுக்கப்பட்டது என விசாரித்து வருகின்றனர். இதற்காக புகார் கொடுத்தவர்களுக்கு சம்மன் அனுப்பி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையில் ராஜேந்திர பாலாஜி டெல்லியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. முக்கிய அரசியல் கட்சி பிரமுகர் துணையுடன் அவர் அங்கு இருப்பதாக தெரிகிறது.

இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில் ராஜேந்திர பாலாஜி தரப்பில் புகார் கொடுத்தவர்களை சந்தித்து சமரச முயற்சி எடுக்கப்படுவதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளன. இதுகுறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.