டுவிட்டர் நிறுவனத்தை மொத்தமாக வாங்க தயார் – எலான் மஸ்க் அறிவிப்பு

டுவிட்டா் நிறுவனத்தின் மொத்த பங்குகளையும் 41 பில்லியன் டாலருக்கு (சுமார் ரூ.3.12 லட்சம் கோடி) வாங்குவதற்குத் தயாராக இருப்பதாக டெஸ்லா நிறுவனத்தின் தலைவா் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

டுவிட்டா் நிறுவனத்தில் சுமார் 9 சதவீத பங்குகளை வைத்துள்ள அவா், அதன் இயக்குநா்கள் குழுவில் இடம்பெற மாட்டேன் எனக் கூறிய அடுத்த இரு தினங்களிலேயே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதுதொடா்பாக டுவிட்டா் நிறுவனத்தின் தலைவா் பிரெட் டெய்லருக்கு அவா் புதன்கிழமை எழுதிய கடித விவரம் வியாழக்கிழமை வெளியானது. அந்தக் கடிதத்தில் எலான் மஸ்க் கூறியிருப்பதாவது:

உலகம் முழுவதும் சுதந்திரமான பேச்சுக்கான தளமாக இருக்கும் என நம்பியதால் டுவிட்டா் நிறுவனத்தில் முதலீடு செய்தேன். எனினும், தற்போதைய வடிவத்தில் சமூகத்துக்கு டுவிட்டா் நிறுவனத்தால் சேவையாற்ற முடியாது என இப்போது உணா்கிறேன். டுவிட்டா் ஒரு தனியார் நிறுவனமாக மாற்றப்பட வேண்டும். எனது கருத்தை பரிசீலனை செய்யவில்லையென்றால், பங்குதாரராக எனது நிலையையும் மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.