டிராவை நோக்கி செல்லும் ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் இடையிலான முதல் டெஸ்ட்

ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் பேட்டிங் தேர்வு செய்தார்.

அதன்படி, முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் 4 விக்கெட் இழப்புக்கு 476 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அசார் அலி 185 ரன்னிலும், இமாம் உல் ஹக் 157 ரன்னிலும் வெளியேறினர்.

தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான உஸ்மான் கவாஜா, டேவிட் வார்னர் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தனர். வார்னர் 68 ரன்னிலும், உஸ்மான் கவாஜா 97 ரன்னிலும் வெளியேறினர். 3-ம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 2 விக்கெட் இழப்புக்கு 271 ரன்கள் எடுத்தது. லபுஸ்சனே 69 ரன்னுடனும், ஸ்டீவ் ஸ்மித் 24 ரன்னுடமும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
இந்நிலையில், நான்காம் நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட லபுஸ்சனே 90 ரன்னில் வெளியேறினார். ஸ்மித் 78 ரன்னில் அவுட்டானார். கேமரூன் கிரீன் 48 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.

இறுதியில், நான்காம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 7 விக்கெட் இழப்புக்கு 449 ரன்கள் எடுத்துள்ளது. மிட்செல் ஸ்டார்க் 12 ரன்னுடனும், பாட் கம்மின்ஸ் 9 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

பாகிஸ்தான் அணி சார்பில் நவ்மான் அலி 4 விக்கெட் கைப்பற்றினார்.

இன்னும் ஒரு நாள் மீதமிருக்கும் நிலையில், ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வராத நிலையில், போட்டி டிரா ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.