டிஆர்எஸ் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்த இந்திய கிரிக்கெட் வீரர்கள்

இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கேப்டவுனில் நடைபெற்றது.

டாஸ் வென்ற இந்திய அணி முதல் இன்னிங்சில் 77.3 ஓவர்களில் 223 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. கேப்டன் விராட் கோலி அதிகபட்சமாக 79 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

தென்ஆப்பிரிக்கா தரப்பில் காஜிசோ ரபடா 4 விக்கெட்டும், மார்கோ ஜான்சென் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 76.3 ஓவர்களில் 210 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக பும்ரா 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

13 ரன்கள் முன்னிலை வகித்த இந்திய அணி 2-வது இன்னிங்சில் 198 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ரிஷப் பண்ட் அதிகபட்சமாக 100 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

தென் ஆப்பிரிக்கா சார்பில் ஜேன்சன் 4 விக்கெட்டும், ரபாடா, நிகிடி தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து 212 ரன்கள் இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்கா அணி 2வது இன்னிங்சை தொடர்ந்தது. 3-ம் நாள் முடிவில் அந்த அணி 2 விக்கெட்டுக்கு 101 ரன்கள் எடுத்துள்ளது.

இந்நிலையில், ஆட்டத்தின் 21-வது நிமிடத்தில் அஷ்வின் வீசிய ஓவரை கேப்டன் டீன் எல்கர் எதிர்கொண்டார். அப்போது டீன் எல்கர் கால்காப்பில் வாங்கிய பந்துக்கு அஷ்வின் உள்ளிட்ட வீரர்கள் நடுவரிடம் அப்பீல் செய்தனர். இதற்கு களநடுவர் அவுட் வழங்கினார்.

கேப்டன் எல்கர் டிஆர்எஸ்முறையில் அப்பீல் செய்தார். இதை டிவி ஸ்க்ரீனில் பார்த்த நடுவர்கள் பந்து ஸ்டெம்புக்கு மேலே செல்லும் என்று கூறி அவுட் வழங்கியதை ரத்து செய்தனர். ஆனால், எல்கர் கால்காப்பில் வாங்கியது தெளிவாகத் தெரிந்தது, அவுட் என்பதும் தெளிவாகத் தெரிந்தது.

டிஆர்எஸ் முறையில் அவுட் ரத்தானது இந்திய வீரர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதையடுத்து, ஸ்டெம்ப்பில் உள்ள மைக்ரோஃபோனில் இந்திய வீரர்கள் தங்கள் அதிருப்தியை பதிவு செய்தனர்.

உங்கள் அணியில் கவனம் செலுத்துங்கள், எதிரணியின் மீது அல்ல. எல்லா நேரமும் எங்களை பின்தொடர முயற்சிக்கிறார்கள் என்றார் கேப்டன் விராட் கோலி.

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல், 11 வீரர்களுக்கு எதிராக ஒட்டுமொத்த நாடே விளையாடுகிறது என தெரிவித்தார்.