’ஜெய் பீம்’ திரைப்பட விவகாரம் – சூர்யாவுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் ரசிகர்கள்

ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கும் படம் ‘ஜெய் பீம்’. பழங்குடியின மக்களின் வாழ்வியலை மையமாக எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. பிரபலங்கள் பலரும் இப்படத்தை பார்த்து வெகுவாக பாராட்டினர்.

இதனிடையே, ஜெய் பீம் படத்தில் பழங்குடியினர்களை சித்திரவதை செய்யும் குருமூர்த்தி என்கிற போலீஸ் கதாபாத்திரம் வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர் போல் காட்டப்பட்டு இருப்பதாக எதிர்ப்பு கிளம்பியது. இதற்கு பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்ததோடு, நடிகர் சூர்யாவுக்கு அடுக்கடுக்கான கேள்விகளையும் எழுப்பி இருந்தார். இதற்கு சூர்யாவும் அறிக்கை வாயிலாக பதிலளித்தார்.

இந்நிலையில், ‘ஜெய் பீம்’ பட விவகாரம் தொடர்பாக நடிகர் சூர்யா, தயாரிப்பாளர் ஜோதிகா மற்றும் இயக்குனர் ஞானவேல் உள்ளிட்டோருக்கு வன்னியர் சங்கம் சார்பில் ரூ.5 கோடி இழப்பீடு தர வேண்டும் என்றும், வன்னியர் சமூகத்தினரை தவறாக சித்தரித்ததற்காக நாளிதழ் மற்றும் ஊடகங்கள் வாயிலாக மன்னிப்பு கோர வேண்டும் எனவும் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.

இந்நிலையில், சூர்யாவிற்கு ஆதரவாக சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் களமிறங்கி இருக்கிறார்கள். ரசிகர்கள் மட்டுமில்லாமல், சார்பட்டா பரம்பரை இயக்குனர் பா.ரஞ்சித், ஜடா பட இயக்குனர் குமரன் உள்ளிட்ட பலரும் #WeStandWithSuriya என்ற ஹேஷ்டேக்கில் சூர்யாவின் காமன் டிபியை பதிவு செய்து வருகிறார்கள். மேலும் இந்த ஹேஷ்டேக் டிரெண்டிங்கில் இடம் பிடித்து இருக்கிறது.