ஜெயலலிதா நினைவிடம் கட்டும் பணி – சிறப்பு அதிகாரியாக ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை அதிகாரி நியமனம்

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அங்கு ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது.

அதன்படி ஜெயலலிதாவின் நினைவு மண்டபம் கட்டுவதற்காக ரூ.50.80 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதற்கான கட்டுமான பணியை கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 8-ந் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் தொடங்கி வைத்தனர். தொடர்ந்து இரவு பகலாக பணிகள் நடந்து வருகிறது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பணியில் சற்று தொய்வு ஏற்பட்டது. இருந்தாலும் நினைவு மண்டபத்தில் அமைக்கப்படும் பீனிக்ஸ் பறவைக்கான ராட்சத சிறகு மற்றும் அதனை தாங்கி நிற்கும் கருவிகள் துபாயில் இருந்து கப்பலில் கொண்டு வரப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.

இந்நிலையில் சென்னை மெரினாவில் கட்டப்பட்டு வரும் ஜெயலலிதா நினைவிட பணிகளுக்காக தமிழக அரசு சிறப்பு அதிகாரியை நியமனம் செய்துள்ளது. சிறப்பு அதிகாரியாக ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் பாண்டியராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஜெயலலிதா நினைவிட கட்டுமான பணியை விரைந்து முடிக்க 3 மாதங்களுக்கு பாண்டியராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.