ஜூனியர் என்.டி.ஆர் பிறந்தநாளுக்காக புதிய போஸ்டரை வெளியிட்ட ‘ஆர்.ஆர்.ஆர்’ படக்குழு

இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் தற்போது இரத்தம் ரணம் ரௌத்திரம் (ஆர்.ஆர்.ஆர்) படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் தெலுங்கின் முன்னணி கதாநாயகர்களான ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். டிவிவி தானய்யா தயாரிக்கும் இந்தப் படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி வருகிறது.

மேலும் அஜய் தேவ்கன், சமுத்திரகனி, அலியா பட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்தின் கதை சுதந்திர போராட்ட வீரர்களான சீதராமராஜு, கொமராம்பீம் ஆகியோர் வாழ்க்கையை தழுவி எழுதப்பட்டிருக்கிறது. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5  மொழிகளில் உருவாகி வருகிறது. இறுதிக்கட்டத்தில் உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நடிகர் ஜூனியர் என்.டி.ஆரின் பிறந்தநாளான இன்று, ஆர்.ஆர்.ஆர் படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. கையில் ஈட்டியுடன் மாஸான கெட்டப்பில் இருக்கும் ஜூனியர் என்.டி.ஆரின் இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.