ஜூனியர் உலக கோப்பை ஆக்கி இன்று தொடக்கம்

12-வது ஜூனியர் உலக கோப்பை ஆக்கி போட்டி (21 வயதுக்குட்பட்டோர்) ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் இன்று முதல் வருகிற 5-ந்தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்கும் 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளன.

இதன்படி ‘ஏ’ பிரிவில் பெல்ஜியம், சிலி, மலேசியா, தென்ஆப்பிரிக்கா, ‘பி ’ ரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பிரான்ஸ், போலந்து, கனடா, ‘சி’ பிரிவில் ஸ்பெயின், நெதர்லாந்து, தென் கொரியா, அமெரிக்கா, ‘டி’ பிரிவில் ஜெர்மனி, அர்ஜென்டினா, பாகிஸ்தான், எகிப்து ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெறும். கொரோனா பயணக்கட்டுப்பாடுகளை காரணம் காட்டி ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் விலகி விட்டன.

6 முறை சாம்பியனான ஜெர்மனி, 2 முறை சாம்பியனான இந்தியா மற்றும் பெல்ஜியம், நெதர்லாந்து அணிகள் கோப்பையை வெல்லும் வாய்ப்பில் முன்னணியில் உள்ளன.

இந்திய அணி விவேக் சாகர் பிரசாத் தலைமையில் களம் இறங்குகிறது. இவர் டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்று வரலாறு படைத்த இந்திய சீனியர் அணியில் இடம் பிடித்தவர் ஆவார். 2016-ம் ஆண்டு பெல்ஜியத்தை தோற்கடித்து வாகை சூடிய இந்திய அணி பட்டத்தை தக்க வைக்கும் முனைப்புடன் ஆயத்தமாகி வருகிறது. உள்ளூர் சூழல் இந்திய அணிக்கு சாதகமான அம்சமாகும். ஆனால் கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடைமுறை காரணமாக ரசிகர்களுக்கு அனுமதி இல்லை.

இந்திய இளம் படைக்கு மூத்த வீரர்கள் பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளனர். சீனியர் அணியின் கேப்டன் மன்பிரீத் சிங் கூறும் போது, ‘சமீபத்தில் எங்களுக்கு எதிராக ஜூனியர் அணியினர் சில பயிற்சி ஆட்டங்களில் விளையாடினர். அதில் ஒரு ஆட்டத்தில் எங்களை தோற்கடித்தனர். இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதற்கான திறமை அவர்களிடம் இருப்பதாக நம்புகிறேன். ஒரு அணியாக தொடர் முழுவதும் ஒருங்கிணைந்து விளையாடினால் நிச்சயம் மீண்டும் கோப்பையை வெல்ல முடியும்.

ஜூனியர் அணியின் கேப்டன் விவேக் சாகரிடம் நான் பலமுறை பேசி இருக்கிறேன். ஒரு அணியாக உங்களது ஆட்டத்தில் முழு கவனமுடன் இருங்கள். அவ்வாறு செயல்பட்டால் வெற்றி பெற முடியும் என்ற கூறியிருக்கிறேன்’ என்றார்.

மற்றொரு இந்திய மூத்த வீரர் ஸ்ரீஜேஷ் கூறுகையில், ‘மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தின் முன்பு விளையாடும் வாய்ப்பை நமது வீரர்கள் தவற விடுகிறார்கள். கலிங்கா மைதானத்தின் அழகே ரசிகர்களின் உற்சாகமும், ஆர்ப்பரிப்பும் தான். ரசிகர்கள் இல்லாவிட்டாலும் சீதோஷ்ண நிலை நமது அணிக்கு சிறப்பாக செயல்பட உதவிகரமாக இருக்கும் என்று நினைக்கிறேன்’ என்றார்.

முதல் நாளான இன்று இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் டிமோதீ கிளைமென்ட் தலைமையிலான பிரான்சை (இரவு 8 மணி) சந்திக்கிறது.

முன்னதாக மற்ற ஆட்டங்களில் பெல்ஜியம்-தென்ஆப்பிரிக்கா (காலை 9.30 மணி), ஜெர்மனி-பாகிஸ்தான் (பகல் 12 மணி), கனடா-போலந்து (பிற்பகல் 2.30 மணி), மலேசியா-சிலி (மாலை 5 மணி) ஆகிய அணிகள் மோதுகின்றன. போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.