ஜூனியர் உலக கோப்பை ஆக்கி – 13 கோல்கள் அடித்து கனடாவை துவம்சம் செய்தது இந்தியா

12-வது ஜூனியர் (21 வயதுக்கு உட்பட்டோர்) உலக கோப்பை ஆக்கி போட்டி ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. வருகிற 5-ம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் இந்தியா, ஜெர்மனி, பெல்ஜியம், பாகிஸ்தான் உள்பட 16 அணிகள் பங்கேற்றுள்ளன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெறும்.

முதல் நாளில் பி பிரிவில் நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, பிரான்சை எதிர்கொண்டது. இதில் இந்திய அணி 4-5 என்ற கணக்கில் பிரான்சிடம் அதிர்ச்சி தோல்வி கண்டது.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற பி பிரிவு லீக் ஆட்டத்தில் இந்தியா, கனடா அணிகள் மோதின. முதல் போட்டியில் அதிர்ச்சி தோல்வி அடைந்த இந்திய அணி இந்தப் போட்டியில் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியது. இதனால் முதல் பாதியி இந்தியா 4-1 என முன்னிலை வகித்தது.

இரண்டாவது பாதியிலும் இந்தியாவின் ஆக்ரோஷம் தொடர்ந்தது. இந்திய வீரர்கள் சஞ்சய், அராய்ஜித் சிங் ஹாட்ரிக் கோல் அடித்தனர்.

இறுதியில், இந்தியா 13-1 என்ற கோல் கணக்கில் கனடாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.