ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட் – ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது

ஜூனியர் உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மோதின. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட் செய்த இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 290 ரன்கள் குவித்தது. கேப்டன் யாஷ் தல் பொறுப்புடன் ஆடி சதமடித்து அசத்தினார். அவர் 110 ரன்னில் அவுட்டானார். ஷேக் ரஷீத் 94 ரன்னில் அவுட்டானார். கடைசி கட்டத்தில் தினேஷ் பானா 4 பந்துகளில் 2 சிக்சர், 2 பவுண்டரி 20 ரன் எடுத்தார்.

ஆஸ்திரேலியா சார்பில் ஜாக் நிபேட், வில்லியம் சைஸ்மான் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 291 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது. லச்லான் ஷா மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து அரை சதம் அடித்து 51 ரன்னில் ஆட்டமிழந்தார். கோரெ மில்லர் 38 ரன்னும், கேம்ப்பெல் 30 ரன்னும் எடுத்தனர்.
மற்ற வீரர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை.

இறுதியில், ஆஸ்திரேலியா அணி 194 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இந்தியா 96 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இந்தியா சார்பில் விக்கி ஓஸ்ட்வல் 3 விக்கெட்டும், ரவிகுமார், நிஷாந்த் சிந்துவும் தலா2 விக்கெட்டும் வீழ்த்தினர். 110 ரன்கள் அடித்த யாஷ் தல் ஆட்ட நாயகன் விருது வென்றார்.

நாளை மறுதினம் நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் இந்திய அணி இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.