‘ஜீவி’ படத்தின் கதையாசிரியர் பாபுதமிழ் இயக்கியிருக்கும் ‘க்’

வெற்றி நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற திரைப்படம் ஜீவி. இந்த திரைப்படத்தில் முக்கோண தொடர்பியல் விதி எனும் கருவை வைத்து, கதை, திரைக்கதை அமைத்து ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் மிகப்பெரிய அளவில் பாராட்டுக்களை குவித்தவர் பாபுதமிழ்.

இவர் தற்போது ‘க்’ என்ற படத்தை இயக்கி இருக்கிறார். ஒரு கால்பந்து விளையாட்டு வீரனுக்கு ஏற்படும் உளவியல் சிக்கல்களும் அதனையொட்டி நடக்கும் ஃபேண்டஸி தருணங்களையும் மையமாக வைத்து இத்திரைப்படத்தை இயக்கி இருக்கிறார் பாபுதமிழ்.

இப்படம் குறித்து இயக்குனர் பாபுதமிழ் கூறும்போது, ‘ஊர் பக்கம் பலர் க் வைத்து பேசுவார்கள். அதாவது பொடி வைத்து பேசுவதைத் தான் க் என்பார்கள். இந்த படத்தில் யார் என்ன பொடி வைத்து பேசுகிறார்கள் என்பதை சைக்காலஜி ஃபேண்டஸி வகையில் உருவாக்கி இருக்கிறேன்.

இந்த படத்தில் யோகேஷ் மற்றும் அனிகா முதன்மை பாத்திரங்களில் நடித்து இருக்கிறார்கள். மேலும் குரு சோமசுந்தரம், ஆடுகளம் நரேன், ஒய்.ஜி.மகேந்திரன் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு கவாஸ்கர் அவினாஷ் இசையமைத்துள்ளார். தர்மராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் மற்றும் பிரபு இணைந்து க் படத்தை வழங்குகிறார்கள். இப்படம் டிசம்பர் 10 ஆம் தேதி வெளியாக உலகமெங்கும் திரையரங்குளில் வெளியாகிறது.