ஜிஹாப் அணிந்து வர தடை – கர்நாடகாவின் கல்லூரி பேராசிரியை ராஜினாமா

கர்நாடக மாநிலத்தில் உள்ள பள்ளி-கல்லூரிகளில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கல்லூரி மாணவிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளதால் கல்லூரி பேராசிரியை ஒருவர் தனது வேலையை ராஜினாமா செய்துள்ளார். அவரது பெயர் ஷாந்தினிநஸ். இவர் கர்நாடக மாநிலம் தும்கூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் ஆங்கில பேராசிரியையாக பணிபுரிந்து வந்தார்.

இவரை ஹிஜாப் அணிந்து வகுப்புகள் நடத்தக்கூடாது என வற்புறுத்தியதால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் ராஜினாமா செய்தார்.

கடந்த 3 ஆண்டுகளாக நான் ஹிஜாப் அணிந்து வகுப்புகள் எடுத்து வந்தேன். நான் சிறப்பாக பணியாற்றி வந்தேன். என்னால் எந்த பிரச்சினையும் ஏற்பட்டது இல்லை.

தற்போது கல்லூரி முதல்வர் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வரக்கூடாது என அறிவுறுத்தி உள்ளார். இது எனது மனதை காயப்படுத்துவது போல் உள்ளது. சுயமரியாதையை நான் விட்டுக்கொடுக்க விரும்பவில்லை. மதம் சார்ந்த உரிமைகளை பின்பற்ற அரசியல் அமைப்பு சாசனம் அனுமதிப்பதை யாராலும் மறுக்க முடியாது.

ஆனால் ஜனநாயகமற்ற செயலை கண்டிக்கிறேன். எனவே எனது வேலையை ராஜினாமா செய்கிறேன். இது எனது சொந்த முடிவு.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த குற்றச்சாட்டுக்கு கல்லூரி முதல்வர் மறுப்பு தெரிவித்து உள்ளார்.

இந்த விவகாரம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.