Tamilவிளையாட்டு

சையத் முஷ்டாக் அலி டிராபி – இறுதிப் போட்டிக்கு தமிழகம் முன்னேற்றம்

சையத் முஷ்டாக் அலி டிராபி டி20 தொடரில் அரையிறுதிப் போட்டிகள் நேற்று நடைபெற்றன. முதல் போட்டியில் அரியானா அணியை வீழ்த்தி கர்நாடகா வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது.

அரையிறுதிப் போட்டியின் இரண்டாவது ஆட்டத்தில் தமிழக அணி ராஜஸ்தானை எதிர்கொண்டது. குஜராத் மாநிலம் சூரத் நகரில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற தமிழக அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து, ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் தீபக் சஹார் மற்றும் அங்கித் களமிறங்கினர். ஆனால் அணியின் ஸ்கோர் 23 ஆக இருந்தபோது கேப்டன் திபக் சஹார் 7 ரன்களில் சாய் கிஷோரின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து அங்கித்தும் 15 ரன்னில் ஆட்டமிழந்தார்.

பின்னர் வந்த வீரர்கள் அனைவரும் தமிழக வீரர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து தங்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்து பெவிலியன் திரும்பினர். சற்று நிலைத்து நின்று ஆடிய அந்த அணியின் ராஜேஷ் 23 ரன்கள் எடுத்தார்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 112 ரன்கள் மட்டுமே எடுத்தது.

தமிழக அணி சார்பில் விஜய் சங்கர் 4 ஓவர்கள் வீசி 13 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து 113 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தமிழக அணியின் தொடக்க வீரர்களாக ஹரி நிஷாந்த் மற்றும் ரவிசந்திரன் அஸ்வின் களமிறங்கினர்.

ஹரி நிஷாந்த் ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார். பின்னர் களமிறங்கிய வாஷிங்டன் சுந்தருடன் கைகோர்த்த அஸ்வின் ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சை சிதறடித்தனர். அஸ்வின் 31 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த கேப்டன் தினேஷ் கார்த்திக் 17 ரன்களில் வெளியேறினார்.

இறுதியில் தமிழக அணி 17.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து 116 ரன்கள் அடித்து வெற்றி இலக்கை எட்டியது. தமிழக அணியின் வீரர் வாஷிங்டன் சுந்தர் 54 ரன்கள் அடித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

இந்த வெற்றியின் மூலம் சையத் முஷ்டாக் அலி டிராபி டி20 தொடரின் இறுதி போட்டிக்கு தமிழக அணி முன்னேறியது. மேலும், வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் கர்நாடகாவை எதிர்கொள்கிறது தமிழகம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *