செஸ் ஒலிம்பியாட் போட்டி – நேற்று மேலும் 12 நாட்டு வீரர்கள் சென்னை வந்தடைந்தனர்

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரம் பூஞ்சேரி கிராமத்தில் உள்ள போர் பாயிண்ட்ஸ் ஷெரட்டன் நட்சத்திர விடுதி வளாகத்தில் வருகிற 28-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை நடக்கிறது. இந்தியாவில் முதல் முறையாக நடைபெறும் வரலாற்று சிறப்புமிக்க செஸ் ஒலிம்பியாட்டில் 187 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்பதற்காக ஒவ்வொரு நாட்டு வீரர், வீராங்கனைகள் சென்னை வர தொடங்கி உள்ளனர். முதல் அணியாக ஆப்பிரிக்க கண்டத்தைச் சேர்ந்த மடகாஸ்கர் தீவைச் சேர்ந்த வீரர்கள் வந்தனர். அதைத் தொடர்ந்து அங்கேரி, ஜாம்பியா நாட்டு அணிகள் வந்தன.

அதைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்கா, நைஜீரியா, உருகுவே, டோகோ, இங்கிலாந்து, ஆங்காங், வேல்ஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், செர்பியா, வியாட்நாம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் வந்தனர். நேற்று மேலும் 12 நாட்டு வீரர், வீராங்கனைகள் சென்னை வந்தனர். உகாண்டா, கோஸ்டாரிகா, மேகன்தீவு, கஜகஸ்தான், கயானா, தான்சானியா, போலந்து, எஸ்டோனியா, பல்கேரியா, செர்பியா, சோமோரோஸ் தீவு உள்ளிட்ட 12 நாடுகளைச் சேர்ந்த வீரர்-வீராங்கனைகள் இன்று அதிகாலையில் வந்தனர்.

விமான நிலையத்தில் அவர்களை தமிழக அரசு அதிகாரிகள் வரவேற்றனர். தன்னார்வலர்கள் உதவியுடன் அவர்கள் ஓட்டலுக்கு அழைத்து செல்லப்பட்டனர். இன்று இரவுக்குள் செக்குடியரசு, ஆஸ்திரேலியா, இந்தோனேசியா, நியூசிலாந்து, பார்படோஸ், உக்ரைன், பப்புவா நியூ கினியா, ஈரான், கனடா, தென்ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 31 வீரர், வீராங்கனைகள் வருகிறார்கள்.