Tamilசெய்திகள்

செவிலியர் பணி நியமனத்தில் மோசடி! – தேர்வு எழுதியவர்கள் போராட்டம்

செவிலியர்கள் பணிக்கான தேர்வை மருத்துவ தேர்வு வாரியம் கடந்த ஜூன் மாதம் நடத்தியது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் பலரையும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கவில்லை என்றும், செவிலியர்களை பணி நியமனம் செய்வதில் முறைகேடு நடப்பதாகவும் தேர்ச்சி பெற்றவர்களில் சிலர் நேற்று சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்துக்கு அரசு பள்ளியில் பயிற்சி பெறும் மற்றும் பயிற்சி பெற்ற செவிலியர்கள் சங்க தலைவர் பூமிநாதன் தலைமை தாங்கினார். கவுரவ தலைவர் சீனிவாசன் முன்னிலை வகித்தார். பல்வேறு மாவட்டங்களில் இருந்து தேர்வில் தேர்ச்சி பெற்று இருந்தவர்கள் தங்களுடைய குடும்பத்தினருடன் வந்து போராட்டத்தில் கலந்து கொண்டனர். போராட்டம் குறித்து பூமிநாதன் கூறியதாவது:-

கடந்த ஜூன் மாதம் நடந்த தேர்வில், 1,900 பேர் எழுதினார்கள். மதிப்பெண் பட்டியல் அண்மையில் வெளியானது. அதில் பலரும் தேர்ச்சி பெற்று இருந்தனர். ஆனால் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டதில், அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றவர்களின் பெயர்கள் இடம்பெறவில்லை.

சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டு இருப்பவர்களில் பலர் ஒப்பந்த அடிப்படையில் பணி செய்து வந்த செவிலியர்கள் ஆவார்கள். அவர்கள் மிகவும் குறைவான மதிப்பெண் எடுத்தவர்கள், பணம் கொடுத்து வேலை வாங்க முயற்சிக்கிறார்கள். இதற்கு தேர்வு வாரியம் எப்படி உடந்தையாக செயல்படுகிறது?.

நல்ல மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றவர்களில் பலரை அழைக்காததற்கு காரணம் என்ன?. 69 மதிப்பெண் எடுத்தவரையே சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கவில்லை. இது எந்த விதத்தில் நியாயம்?. தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தும் எந்த பிரயோஜனமும் இல்லாமல் இருக்கிறது.

எங்களுக்கு மருத்துவ தேர்வு வாரியத்தின்(எம்.ஆர்.பி.) மீது நம்பிக்கை இல்லை. எனவே இந்த தேர்வை ரத்து செய்துவிட்டு, டி.என்.பி.எஸ்.சி. மூலம் தேர்வு நடத்தி செவிலியர்களை பணி நியமனம் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களும் இதே கருத்தை தான் முன்வைத்தனர். உடனடியாக இதுகுறித்து முதல்-அமைச்சர் தலையிட்டு, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோளும் விடுத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *