செல்லப்பிராணிகள், விலங்குகளை துன்புறுத்தினால் 5 ஆண்டுகள் சிறை!

செல்லப்பிராணிகள், விலங்குகளை அடித்து துன்புறுத்துவது, கொல்வது போன்ற சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன.

ஒரு விலங்கை அடிப்பது, உதைப்பது, சித்ரவதை செய்வது, பட்டினி போடுவது அதிக சுமை ஏற்றுவது போன்றவிதமான கொடுமையில் ஈடுபடுபவர்களுக்கு ரூ.50 வரைதான் அபராதம் விதிக்கப்படுகிறது.

இந்த நிலையில் 60 ஆண்டுகால விலங்குகளை துன்புறுத்தும் தடுப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கான வரைவு ஒன்றை தயாரித்துள்ளது.

அதன்படி இனி விலங்குகளை காயப்படுத்துவது அல்லது கொல்வது போன்ற செயல்களில் ஈடுபட்டால், ரூ.75 ஆயிரம் அல்லது விலங்குகளின் மதிப்பில் 3 மடங்கு அபராத தொகையாக விதிக்கப்படும்.

மேலும் 5 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை விதிக்கப்படும். இதற்கான புதிய சட்டத்திருத்தம் விரைவில் கொண்டுவரப்படுகிறது.

டெல்லி மேல்சபையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய மீன்வள, கால்நடை வளர்ப்பு மற்றும் பால்வளர்ச்சி துறை மந்திரி கிரிராஜ் சிங் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அதில் அவர் கூறியதாவது:-

விலங்குகளை துன்புறுத்துவதை தடுக்கும் சட்டத்தை திருத்துவது அவசியமாகும். கடுமையான அபராதங்களை விதிக்க அரசு அங்கீகரித்துள்ளது. இந்த வரைவு திருத்தத்தில் அபராதம் மற்றும் தண்டனை விதிகள் அடங்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விலங்குகளுக்கு எதிரான துன்புறுத்தல் தொடர்பான 316 வழக்குகள் நாடு முழுவதும் பல்வேறு கோர்ட்டுகளில் நிலுவையில் உள்ளது என்று பாராளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சுப்ரீம் கோர்ட்டில் மட்டும் 64 வழக்குகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.