செப்டம்பர் 6 ஆம் தேதி நள்ளிரவு முதல் அரசு விரைவு பேருந்து சேவை தொடங்குகிறது

தமிழ்நாட்டில் மாவட்டங்களுக்கு இடையே அரசு மற்றும் தனியார் பஸ்களை இயக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது.

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். வருகிற 7-ந் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையே பஸ் போக்குவரத்து தொடங்க உள்ளது.

7-ந் தேதி தமிழகத்தில் 7 வழித்தடங்களில் ரெயில் போக்குவரத்தும் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதையடுத்து அரசு விரைவு பஸ்கள் எப்போது இயக்கப்படும் என்ற கேள்வி எழுந்தது.

இதுகுறித்து மூத்த அதிகாரிகளிடம் விசாரித்த போது, “வருகிற 7-ந் தேதி முதல் தொலைதூர அரசு விரைவு பஸ்கள் மற்றும் சொகுசு பஸ்களை இயக்க அரசு விரைவு போக்குவரத்து கழகம் தயாராகி வருகிறது. அன்று முதல் திட்டமிட்டபடி அரசு விரைவு பஸ்களின் போக்குவரத்து தொடங்கும்” என தெரிவித்தனர்.

இதுதொடர்பாக அரசு விரைவு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் இளங்கோவன் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாட்டில் அரசு விரைவு மற்றும் சொகுசு பஸ்கள் சுமார் 1000 உள்ளன. இந்த பஸ்களில் சுமார் 350 பஸ்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வெளி மாநிலங்களுக்கு இயக்கப்படுகின்றன.

மீதம் உள்ள சுமார் 650 பஸ்கள் தமிழ்நாட்டுக்குள் மாவட்டங்களுக்கு இடையே இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது மாவட்டங்களுக்கு இடையே பஸ்களை இயக்கலாம் என்று தமிழக அரசு தளர்வுகளை அறிவித்து இருப்பதால் அரசு விரைவு பஸ்களும் இயக்கப்படும்.

முதல் கட்டமாக 400 குளிர் சாதன வசதி இல்லாத அரசு விரைவு பஸ்கள் இயக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை, திருச்சி, திருநெல்வேலி, மதுரை, கோவை, திருப்பூர், தஞ்சாவூர், சேலம், ஈரோடு, நாகர்கோவில் உள்பட முக்கிய ஊர்களுக்கு இடையே விரைவு பஸ் போக்குவரத்து தொடங்கும்.

அரசு விரைவு, சொகுசு பேருந்துகளை 6-ந் தேதி நள்ளிரவு முதலே தொடங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து அன்று இரவு முதல் வழக்கமான விரைவு பஸ் போக்குவரத்து சேவை தொடங்கும்.

வெளி மாநிலங்களுக்கு பஸ்களை இயக்குவது தொடர்பாக இன்னமும் எங்களுக்கு எந்த அதிகாரப்பூர்வ உத்தரவும் கிடைக்கவில்லை. அரசு அனுமதி வழங்கியதும் வெளி மாநிலங்களுக்கும் பஸ்கள் இயக்கப்படும்.

அரசு விரைவு, சொகுசு பேருந்துகளில் 60 சதவீத இருக்கைகள் மட்டுமே பயணிகளுக்கு ஒதுக்கப்படும். அரசு விரைவு பஸ்களில் மொத்தம் 43 இருக்கைகள் உண்டு. அதில் 25 இருக்கைகளில் மட்டுமே பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள்.

அதற்கு ஏற்ப பயணிகள் பயணம் செய்ய அறிவுறுத்தப்படுவார்கள். நோய் அறிகுறி இருப்பவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள். குளிர்சாதன வசதியுள்ள பஸ்கள் இயக்கப்பட மாட்டாது.

அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்தையும் பயணிகள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். பயணிகள் ஒத்துழைத்தால்தான் அனைவருக்கும் சிறப்பான அரசு விரைவு பேருந்து சேவைகளை வழங்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அரசு விரைவு, சொகுசு பேருந்துகளில் பயணிகள் எண்ணிக்கை குறைக்கப்படுவதால் கட்டணம் உயர்த்தப்படுமா என்ற கேள்விக்குறி எழுந்தது. ஆனால் கட்டணம் உயர்த்தப்படமாட்டாது என்று விரைவு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் இளங்கோவன் தெரிவித்தார்.

ஆம்னி பஸ் அதிபர்கள் வழக்கம் போல தொலைதூர சேவைகளை தொடங்க அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால் தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்தால் மட்டுமே ஆம்னி பஸ்களுக்கு அனுமதி வழங்கப்படும் என தெரிய வந்துள்ளது.

எனவே தொலைதூர ஆம்னி பஸ்கள் 7-ந்தேதி முதல் இயக்கப்படுமா என்பது விரைவில் தெரியவரும்.

இதற்கிடையே அரசு விரைவு சொகுசு பேருந்துகளை படிப்படியாக அதிகரிக்க அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர். அதற்கு ஏற்ப www.tnstc.in என்ற இணைய தளம் மூலம் முன்பதிவு செய்யும் வசதிகள் தொடங்கப்பட உள்ளது.

வருகிற 6-ந்தேதி நள்ளிரவு முதல் பயணம் செய்வதற்காக நாளை (வெள்ளிக்கிழமை) முதல் முன்பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் சுமார் 5 மாதங்களுக்கு பிறகு மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வழிவகை ஏற்பட்டுள்ளது.