சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு விருது

18-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா கடந்த ஒருவாரமாக நடைபெற்றது. இந்த விழாவில் 53 நாடுகளில் இருந்து 91 திரைப்படங்கள் திரையிடப்பட்டன. இதில் தமிழ்ப் படங்களுக்கான போட்டியில் ‘லேபர்’, ‘கல்தா’, ‘சூரரைப் போற்று’, ‘பொன்மகள் வந்தாள்’, ‘மழையில் நனைகிறேன்’, ‘மை நேம் இஸ் ஆனந்தன்’, ‘காட்பாதர்’, ‘தி மஸ்கிட்டோ பிலாசபி’, ‘சீயான்கள்’, ‘சம் டே’, ‘காளிதாஸ்’, ‘க/பெ ரணசிங்கம்‘, ‘கன்னி மாடம்‘ ஆகிய 13 தமிழ் திரைப்படங்கள் பங்கேற்றன.

அவற்றில் ‘க/பெ ரணசிங்கம்’ படத்தில் அரியநாச்சி எனும் கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சிறந்த நடிகைக்கான விருதை வென்றார். சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு ரசிகர்களும், திரைப் பிரபலங்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.