Tamilவிளையாட்டு

சென்னையில் வலம் வந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதி

தமிழகத்தில் முதன் முறையாக சர்வதேச அளவிலான 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரத்தில் நாளை தொடங்கி ஆகஸ்டு 10-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 187 நாடுகளை சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட சர்வதேச செஸ் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.

இதன் தொடக்க விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் இன்று மாலை பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்கள். இந்த போட்டி பற்றி, நாடு முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கடந்த 19-ந்தேதி செஸ் ஒலிம்பியாட் ஜோதியை பிரதமர் மோடி டெல்லியில் தொடங்கி வைத்தார்.

இந்த ஜோதி நாடு முழு வதும் 72 நகரங்கள் வழியாக கொண்டு வரப்பட்டு நேற்று முன்தினம் புதுச்சேரி வழியாக கோவை பந்தய சாலைக்கு செஸ் ஒலிம்பியாட் ஜோதி சென்றடைந்தது. அங்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அதன்பிறகு சேலம், நெல்லை, கன்னியாகுமரி, தஞ்சாவூர் வழியாக இன்று காலையில் மாமல்லபுரம் வந்தடைந்தது. இந்த சுடரை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் பெற்றுக்கொண்டு அமைச்சர் தா.மோ.அன்பரசனிடம் வழங்கினார். அப்போது பலூன்கள் பறக்கவிடப்பட்டது.

பின்னர் அலங்கரிக்கப்பட்ட போலீஸ் ஜீப்பில் ஊர்வலமாக மேள தாளம் முழங்க கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், தப்பாட்டம், பொய்க்கால் குதிரை, ரேஸ் பைப், ஜீப் வீரர்கள் அணிவகுப்பு என 5 ஆயிரம் பேர்களுடன் சிறப்பான வரவேற்புடன் மாமல்லபுரம் கடற்கரை கோயில் வளாக மேடைக்கு கொண்டு செல்லப்பட்டது.

அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஒலிம்பியாட் ஜோதியை போட்டி நடைபெறும் போர் பாயிண்ட்ஸ் அரங்கத்திற்கு கொண்டு செல்லும் வீரரிடம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மெய்யநாதன், எம்.எல்.ஏ.க்கள் எஸ்.ஆர்.ராஜா, இ.கருணாநிதி, வர லட்சுமி மதுசூதனன், எஸ்.எஸ்.பாலாஜி, பேரூராட்சி தலைவர் வளர்மதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதைத்தொடர்ந்து செஸ் ஒலிம்பியாட் ஜோதி சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. சென்னை வந்தடைந்த ஜோதியை மாநில கல்லூரி மைதானத்தில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், மெய்யநாதன், சேகர் பாபு, உதயநிதி ஸ்டாலின் மற்றும் கிராண்ட்மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் ஆகியோர் வரவேற்றனர்.

பின்னர் தொடக்க விழா நடைபெறும் நேரு உள் விளையாட்டு அரங்கம் நோக்கி ஜோதி ஓட்டம் தொடங்கியது. ஜோதியை விஸ்வநாதன் ஆனந்த் ஏந்திச் சென்றார். ஊர்வலத்தில் இருசக்கர வாகனங்களில் மாணவர்கள் அணிவகுத்து சென்றனர். கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன. ஒலிம்பியாட் ஜோதி நேரு ஸ்டேடியத்தில் வைக்கப்பட்டுள்ள அலங்கார மேடைக்கு வந்தடைகிறது. இன்று நடைபெறும் தொடக்க விழாவின்போது இந்த ஜோதி ஏற்றப்படுகிறது.